கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நேற்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொள்ளேகால் தாலுகா பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் ரமேஷ் கூறுகையில்:-
உலகம் முழுவதும் யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுவது இல்லை. தினமும் கொண்டாடவேண்டும். ஏனென்றால் வனப்பகுதிகள் பாதுகாப்பில் யானைகளின் பங்கு மிகவும் முக்கியம். இந்தியா முழுவதும் 49 ஆயிரத்திற்கும் அதிகமான யானைகள் உள்ளது.
சாம்ராஜ்நகரில் 6 ஆயிரம் யானைகள் உள்ளன. பந்திப்பூரில் மட்டும் 1,200 யானைகள் உள்ளன. இந்த யானைகளில், சில முகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதியை இருப்பிடமாக கொண்டு சில யானைகள் வாழ்கின்றன. இதனால் அடிக்கடி யானைகள் மற்றும் மனிதனுக்கு இடையே மோதல் நடைபெறுகிறது. இதை தடுக்க வனத்துறை சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட ராம்புரா யானைகள் முகாமில் 21 யானைகள் உள்ளது. இதில் சைத்ரா, லட்சுமி என்ற 2 யானைகள் மைசூரு தசரா விழாவில் கலந்து கொள்ள உள்ளன. மீதமுள்ள யானைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பந்திப்பூராவில் உள்ள ராம்புரா முகாமில் உலக யானைகள் தினம் கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.