புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்ற உள்ளார். சுமார் 7 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள இவ்விழாவையொட்டி, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாடுமாறு மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைவரும் சமூக ஊடக முகப்பு படங்களில் தேசியக் கொடியைப் பதிவேற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி, பல்வேறு தரப்பினரும் சமூக ஊடக முகப்பில் தேசியக் கொடியை பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும், ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறும் நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதற்காக, தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது.
குறிப்பாக, பகலில் மட்டுமே தேசியக் கொடி பறக்க வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டு, இரவிலும் பறக்க விடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள்; நடிகர்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உள்ள தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார். இதேபோல, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ஜெய்சங்கர் உட்பட அனைத்து அமைச்சர்களும், தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், வீடுகளில் நேற்று தேசியக் கொடி ஏற்றினர்.
இதேபோல, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா, அக்சய் குமார், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், கோவிந்தா, அனில் கபூர், சன்னி தியோல், மாதவன், ரன்பிர் கபூர், நடிகைகள் ஷில்பா ஷெட்டி, கங்கனா ரணாவத், சுஷ்மிதா சென் உள்ளிட்டோர், தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.
மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி மற்றும் தெலுங்கு, கன்னடம், ஒடியா, பெங்காலி, போஜ்புரி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றினர்.
அதுமட்டுமின்றி, சாதாரண மக்களும் தங்களது வீடுகள், அலுவலகங்களில் நேற்று தேசியக் கொடியைப் பறக்கவிட்டனர்.
செங்கோட்டையில் 7,000 பேர்
டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றிவைத்து, உரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் உட்பட சுமார் 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை முழுவதும் டெல்லி போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
செங்கோட்டையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், டிஆர்டிஓ மற்றும் இதர பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “செங்கோட்டையின் சுற்றுப்புறப் பகுதிக்குள் வருவோரைக் கண்காணிக்க நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர் பாட்டில், ரிமோட் கன்ட்ரோல் கார் சாவிகள், சிகரெட் லைட்டர்கள், சிறிய பெட்டிகள், கைப்பைகள், கேமராக்கள், பைனாகுலர்கள், குடைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
டெல்லி காவல் துறை சிறப்பு ஆணையர் தீபேந்திர பதக் (சட்டம்-ஒழுங்கு) கூறும்போது, “டெல்லியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பட்டம், பலூன்கள், சீன ஒளிக்கூண்டு உள்ளிட்டவற்றை 15-ம் தேதி வரை பறக்கவிடுவோர் தண்டிக்கப்படுவர். வான் பகுதியில் எந்த ஒரு பொருளும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க ராடார்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்றார்.
தோட்டாக்கள் பறிமுதல்
இதற்கிடையில், டெல்லியின் ஆனந்த் விஹார் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் 2,200 துப்பாக்கித் தோட்டாக்களை டெல்லி போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக 6 பேரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அசம்பாவித செயல்களைத் தடுக்க மாநகரம் முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இணையத்தில் பதிவிட மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடியின் 100 வயது தாய் ஹீராபென், குஜராத் தலைநகர் காந்திநகரின் புறநகர்ப் பகுதியில் வசிக்கிறார். அவர் நேற்று தனது வீட்டில் தேசியக் கொடியேற்றினார். மேலும், சிறுவர்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினார். அவர்களோடு சேர்ந்து தேசியக் கொடியை அசைத்து மகிழ்ந்தார். இந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
ராஜஸ்தானின் பாலி நகரில் 3.6 கி.மீ. தொலைவு நீளம்கொண்ட தேசியக் கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேசியக் கொடியை தோளில் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர்.
இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர் உத்தராகண்டின் இந்திய-சீன எல்லையில் சுமார் 14,000 அடி உயர இமயமலைப் பகுதியில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டனர்.
பிரதமர் மோடி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “நாடு முழுவதும் வீடுகள்தோறும் தேசியக் கொடி ஏற்றப்படுவது பெருமிதமாக இருக்கிறது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தேசியக் கொடி இயக்கத்தில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது புகைப்படங்களை https://harghartiranga.com/ இணையத்தில் பதிவேற்ற வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.