ஆரம்பத்தில் கிடார் வாசித்துக் கொண்டிருந்தவர், படிப்படியாக முன்னேறி, பாடலாசிரியராகி, இசையமைப்பாளராகி, இப்போது டைரக்டர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார் கங்கை அமரன்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது சொன்னார்;
“பாரதிராஜாவோட `பதினாறு வயதினிலே’ படத்திலேயே அஸிஸ்டென்ட் டைரக்டராகணும்னு எனக்கு ஆசை… ஆனா அப்போ கிடாரிஸ்ட்டான எனக்கு ஒரு ரிக்கார்டிங்குக்குப் போனா இருநூறு ரூபாய் கிடைக்கும். இதை இழந்துட்டு உதவி டைரக்டரா போக முடியலே… காரணம், அப்போதான் எனக்கு கல்யாணமாகி இருந்தது. குடும்பத்தைக் காப்பாத்தணும்கிற கடமை.
‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வெற்றியடைஞ்ச பிறகு என் அண்ணன் பாஸ்கர்கிட்ட ‘கோழி கூவுது’ கதையைச் சொன்னேன். ‘ஏன்… நீயே இதை டைரக்ட் பண்ணேன்’னு பாஸ்கர் சொன்னபோது எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. – ‘கோழி கூவுது’ படத்தில ஒரு நண்பரை என்னோட உதவியாளரா வச்சிருந்தேன். இவர் ஏற்கெனவே ஒரு படத்தை டைரக்ட் செய்தவர். இதனால என்னாச்சுன்னா படத்தை உண்மையிலேயே அந்த நண்பர்தான் டைரக்ட் செய்யறதாகவும். நான் சும்மா ‘டம்மி’ன்னும் வதந்திகள் பரவ ஆரம்பிச்சது
நான் எதையும் சொந்தமா செய்யனும்னு ஆசைப்படறவன். ஒரு சமயம் ஒரு பிரபல இசையமைப்பாளர் பாடல் எழுதறத்துக்கு என்னைக் கூப்பிட்டார். நானும் போய் ட்யூனுக்குத் தகுந்தாப்பலே எழுதிக் கொடுத்தேன். அவரும் ஓகே சொல்லிட்டார்… ஆனா படத்தோட தயாரிப்பாளர் வந்து, ரொம்பவும் மட்டமான அர்த்தம் தர்ற பல்லவி ஒண்ணு சொல்லி, என் பல்லவியை மாத்தச் சொன்னார்… எனக்கு இது பிடிக்கலே. எழுந்து வந்துட்டேன்.
பாலாஜி சார் தன்னோட ‘வாழ்வே மாயம்’ படத்துக்கு இசையமைப்பாளரா என்னைப் போட்டு, ‘பிரேமாபிஷேகம்’ படத்து பாட்டெல்லாம் ஹிட்… அதே ட்யூனை நீ இந்தப் படத்தில போடணும்னு சொன்னார். நான் அவர்கிட்ட ரொம்பவும் பணிவா, நீங்க சொல்றபடியே செய்திடறேன்… ஆனா அதுக்கு முன்னாடி நான் ஏழெட்டு ட்யூன் போட்டுக் காட்டறேன்.
பிடிச்சதுன்னா பாருங்கன்னு சொல்லி, ட்யூன் போட்டுக் காட்டினேன். ஓகே சொல்லிட்டார் பாலாஜி. அதிலே வர்ற ஒரு பாடலோட பல்லவி ட்யூனைத் தவிர மற்றதெல்லாம் நான் சொந்தமா போட்டதுதான்… இதை எதுக்காகச் சொல்ல வந்தேன்னா ஒரு பாடல் விஷயத்திலேயே சொந்தமா செய்ய விரும்பற நான் டைரக்டர் ஆன விஷயத்திலேயும் அப்படித்தான் இருப்பேன்கிறதைச் சொல்றதுக்குத்தான். அதிலிருந்து ஒரு பாடம். இனிமே பிரபலமான யாரையும் உதவியாளரா வச்சுக்கக் கூடாது.”
– இரா.