மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் விழா – அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்

மாமல்லபுரம்: தமிழகத்தில் முதன்முறையாக, மாமல்லபுரத்தில் சுற்றுலாத் துறைமற்றும் க்ளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச பட்டம் விடும் விழாவை, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மதிவேந்தன்ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றதால் மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலாத்துறை மற்றும் க்ளோபல் மீடியா பாக்ஸ் என்ற நிறுவனம் இணைந்து கடற்கரையையொட்டி 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் பட்டம் விடும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை, பகத்சிங், கதகளி, டால்பின், டிராகன், திருப்பதி வெங்கடாஜலபதி, விநாயகர், பூனை, பாண்டா கரடி, இந்திய தேசியக்கொடி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பறக்க விடப்பட்டிருந்த பிரம்மாண்ட பட்டங்களை அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், ஆணையர் சந்திப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் ராகுல் நால், காஞ்சிபுரம் எம்பி. செல்வம், எம்எல்ஏ. வரலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டம் விடும் விழா 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், தாய்லாந்து, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 6 குழுவினர் மற்றும் நம் நாட்டை சேர்ந்த 4 குழுவினர் என 80 பட்டம் விடும் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். பிற்பகல் 12 முதல் மாலை 6 மணிவரை பட்டங்கள் விடப்படும்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கண்ணைக் கவரும் மின்னொளிக் காட்சிகள் மற்றும் பல்வேறு பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. உணவு விற்பனை கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகளைக் காண www.tnikf.com என்ற இணையதள முகவரியில் கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெறலாம் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இதில், சிறுவர்களுக்கு அனுமதி இலவசமாகவும் பெரியவர்களுக்கு ரூ.150 முதல் ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விழாவின் முதல்நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறுவர், சிறுமியர் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று, நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கூறும்போது, “செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றதன் மூலம் மாமல்லபுரம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது, 3 நாட்கள் நடைபெற உள்ள பட்டம் விடும் விழா சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், அலைச்சறுக்கு உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் தனியார் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகளை உரிய முறையில் நடத்த அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டுபணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.