நியூயார்க்: அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு (75) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி அங்கேயே பள்ளிக் கல்வியை முடித்தார். பிரிட்டனில் கல்லூரி கல்வியை நிறைவு செய்தார். பின்னர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று அந்த நாட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.
சாத்தானின் கவிதைகள்
இதுவரை 14 புத்தகங்களை எழுதியுள்ள சல்மான் ருஷ்டி, புக்கர் பரிசு உள்ளிட்ட உயரிய விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்க அரசு அவருக்கு குடியுரிமை வழங்கியது. முஸ்லிமாக பிறந்து நாத்திகராக வாழ்ந்து வரும் அவர் கடந்த 1988-ம் ஆண்டில் சாத்தானின் கவிதைகள் என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி, எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கொலை செய்ய வேண்டும் என்று கடந்த 1989-ம் ஆண்டில் பத்வா வெளியிட்டார்.
இந்த சூழலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி பங்கேற்றார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் திடீரென மேடையில் ஏறி ருஷ்டியை பலமுறை கத்தியால் குத்தினார். அவரது கழுத்து, வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பாதுகாவலர்கள், பார்வையாளர்கள் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை பிடித்தனர்.
ஒரு கண் பார்வை பறிபோகும்
உயிருக்கு போராடிய சல்மான் ருஷ்டி, ஹெலிகாப்டர் மூலம் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுகிறார். நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் ஒரு கண் பார்வையை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மர்ம நபர் யார்?
சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர், நியூயார்க் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் ஹாதி மடார் (24) என்பதும் லெபனானை பூர்விகமாக கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கொமேனியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டுள்ளார். கொமேனியின் பத்வாவை நிறைவேற்றும் வகையில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸில் ஹாதி மடார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட உலகத் தலைவர்கள் பலரும் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளனர்.