Tamil News Highlights: பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாநகர் பாஜக தலைவர் சரவணன் பேட்டி

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

ரூ.100 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட, 9 கிலோ 590 கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இதுதொடர்பாக, போதை பொருள் கடத்தி வந்த இக்பால் பாஷா என்ற பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையம் உருவாகிய பின்பு, ஒரே பயணியிடம் ஒரே நேரத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.

பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம்

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய, தமிழ்நாடு பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.  நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்று தர இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது

இலங்கை குழந்தைகளுக்கு உதவிய ஆஸ். கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் தொடரில் வென்ற பரிசுத் தொகையை, கடுமையான நிதி நெருக்கடியில் அந்நாட்டு குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வழங்கி உள்ளது. யுனிசெஃப் அமைப்பின் மூலம், இந்த தொகையை இலங்கையில் உள்ள குழந்தைகளின் மேம்பாட்டிற்கு ஆஸ்திரேலியா அளித்து உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
21:44 (IST) 13 Aug 2022
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கான திட்டம் இல்லை. மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ முறையை பற்றி தமிழக அரசு சிந்திக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

20:41 (IST) 13 Aug 2022
ஆகாசவானி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி மரணம்

ஆகாசவானியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி இன்று காலமானார்

20:09 (IST) 13 Aug 2022
டிசம்பர் மாதத்திற்குள் புத்தகப் பைகள் வழங்க நடவடிக்கை – அன்பில் மகேஷ்

அரசு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் புத்தகப் பைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் கல்வி உபகரணப் பொருட்களும் விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

19:57 (IST) 13 Aug 2022
ஆள்மாறாட்ட புகார்: பாஜகவினர் இருவர் கைது

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதியதாக மாதவன் மற்றும் மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

19:55 (IST) 13 Aug 2022
சங்கரன்கோவில்: 30 திமுகவினர் கைது

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் உருவப்பொம்மையை தென்காசியில் எரித்த 30 திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.

19:53 (IST) 13 Aug 2022
பிடிஆர் கார் மீது தாக்குதல்- மார்க்சிஸ்ட் கண்டனம்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

19:50 (IST) 13 Aug 2022
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்குகள்; உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டுள்ளது

19:42 (IST) 13 Aug 2022
வேலுநாச்சியார் இசை நாட்டிய நாடக விழா; மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் இசை நாட்டிய நாடக விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் நாட்டிய நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்துவதற்கான இலச்சினை வெளியிடப்பட்டது.

19:29 (IST) 13 Aug 2022
கூடுதல் கட்டணம்: ரூ.1.37 லட்சம் வசூல்

சென்னையில் தொடர் விடுமுறையை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1.37 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

19:27 (IST) 13 Aug 2022
பஞ்சாப்பில் முகக்கவசம் கட்டாயம்

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

19:13 (IST) 13 Aug 2022
அண்ணாமலை உருவப்பொம்மை எரிப்பு

மதுரையில் தமிழக நிதியமைச்சரும், திமுக மூத்த தலைவர்களுள் ஒருவருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் உருவப் பொம்மையை எரித்து மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

18:54 (IST) 13 Aug 2022
சாதிவாரி கணக்கெடுக்க சீமான் கோரிக்கை

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளா்.

இது குறித்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சமத்துவம் கிடைக்கும்; சாதி மோதல்கள் குறையும்” என்றார்.

18:45 (IST) 13 Aug 2022
வங்கி கொள்ளை- 4 தனிப்படை அமைப்பு

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் துப்பாக்கியை காட்டி ரூ.20 கோடி மதிப்பிலான நகைகளை வங்கி ஊழிர்களே கொள்ளையடித்துள்ளனர்.

இவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

18:36 (IST) 13 Aug 2022
வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய சச்சின் தெண்டுல்கர்

சச்சின் தெண்டுல்கர் அவரது வீட்டில் தேசிய கொடி ஏற்றினார்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லத்தோறும் தேசியக் கொடி என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ள மத்திய அரசு, அனைவரின் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற அழைப்பு விடுத்துள்ளது.

18:14 (IST) 13 Aug 2022
கள்ளக்குறிச்சியில் விசிக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டார்.

அப்போது அனைவரின் பிரச்சினைகளுக்காகவும் விசிக குரல் கொடுக்கும். ஸ்ரீமதி மரணத்தில் உண்மை குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்றார்.

17:37 (IST) 13 Aug 2022
பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு- திமுகவினர் ரயில் மறியல்

தமிழக நிதியமைச்சரும், திமுக மூத்தத் தலைவர்களுள் ஒருவருமான நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17:30 (IST) 13 Aug 2022
ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி தனியார் வங்கியில் 20 கோடி கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஊழியர்கள், காவலாளிகளை கத்தி முனையில் கட்டிப்போட்டு ₨20 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

16:50 (IST) 13 Aug 2022
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர அரசின் நடவடிக்கையால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கும் தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்

16:48 (IST) 13 Aug 2022
இளங்கலை பட்டத்திற்கான தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்றதாக தகவல்

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலை. இளங்கலை பட்டத்திற்கான தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில். மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கருக்கு பதிலாக திவாகர் மாதவன் என்பவர் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

16:38 (IST) 13 Aug 2022
வடபழனி முருகன் கோவில் வாகனம் நிறுத்துமிடம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

வடபழனி முருகன் கோவில் வடக்கு மாட வீதியை வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்துவதற்கு எதிரான வழக்கில் தற்காலிகமாக பயன்படுத்தவே குத்தகை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்ததை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16:13 (IST) 13 Aug 2022
அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் 5 பேர் கைது

இன்று காலை மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 3 பேர் திருச்சி, 2 பேர் மதுரையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

15:28 (IST) 13 Aug 2022
21 குண்டுகள் முழுங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அடக்கம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வீரமரணமடைந்த மதுரை மாவட்டம் டி. புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் உடல் 21 குண்டுகள் முழுங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதால், அவர் பயன்படுத்திய கிரிக்கெட் பேட், சவப்பெட்டியின் மீது நினைவாக வைக்கப்பட்டது.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சல்யூட் அடித்து இறுதி மரியாதை செலுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் ஒன்றாய் சேர்ந்து ராணுவ வீரர் லட்சுமணனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

15:15 (IST) 13 Aug 2022
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள் – ரஜினிகாந்த் வீடியோ!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள் என நடிகர் ரஜினிகாந்த் வீடியோ பதிவின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

15:13 (IST) 13 Aug 2022
அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீச்சு: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

“மதுரை விமான நிலையத்திற்கு வெளியே தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற வாகனத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு காலணி வீசி அநாகரிகமாகவும் அராஜகமாகவும் நடந்து கொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தனது ட்விட்டர் பதிவின் மூலம் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

15:09 (IST) 13 Aug 2022
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க ஏதுவாக, கால்வாய்,நீர்நிலைகளை கிராம நத்தமாக மறுவகைப்படுத்தக் கூடாது. நீர்நிலை மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகளும், நீர் செல்ல முடியாமல் வறட்சியும் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

15:08 (IST) 13 Aug 2022
ஆர்.டி.பி.சி.ஆர் மையம் – முதல்வர் தொடங்கி வைப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் அரசு பொது மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வு மையத்தை தொடங்கி வைத்தார். மற்றும் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி கலனையும் அவர் தொடங்கி வைத்தார்

15:07 (IST) 13 Aug 2022
‘சித்தா மையம்’ தமிழகத்திற்கு பெருமை – அமைச்சர் மா.சு!

சித்த மருத்துவ மையம் தாம்பரத்தில் அமைந்திருப்பது தமிழகத்திற்கு பெருமை என்றும் தெரிவித்துள்ள சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தினமும் சித்த, ஹோமியோபதி மூலம் சிகிச்சை பெறுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

14:13 (IST) 13 Aug 2022
அளவுக்கு அதிகமான ஆர்டர்லி: திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!

ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து நீதிமன்றம் நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில், இன்று நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தேவையில்லாத ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

13:21 (IST) 13 Aug 2022
அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீச்சு – பரபரப்பு

மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு.

உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டு போது அமைச்சர் கார் மீது காலணி வீச்சு

12:57 (IST) 13 Aug 2022
மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை

ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

12:26 (IST) 13 Aug 2022
மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் உடல்

ஜம்மு – காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

12:25 (IST) 13 Aug 2022
ஒரே நுழைவுத்தேர்வு – ப.சிதம்பரம் கேள்வி

இந்தியாவில் பல மொழிகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. ஒரே நுழைவுத் தேர்வு என்றால் மாநில அரசுகள் எதற்கு?

ஒரு நாடு, ஒரு கட்சி, ஒரு தலைவர் என்ற நிலை வந்துவிடும். சுயாட்சி கொண்ட அமைப்பாக மாநிலங்கள் இருக்க வேண்டும் – ப.சிதம்பரம்

12:12 (IST) 13 Aug 2022
‘அனைவருக்கும் கல்வி – அரசின் நோக்கம்’ : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொளத்தூர், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரை

கபாலீஸ்வரர் கல்லூரியில் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு. கல்வி கட்டண விலக்கை அரசின் கடமையாக கருதுகிறேன். அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என ஸ்டாலின் பேச்சு

10:17 (IST) 13 Aug 2022
தங்கம் விலை உயர்வு

சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.39,312 ஆகவும், ஒரு கிராம் தங்கம் 4,914 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

09:38 (IST) 13 Aug 2022
கள்ளகுறிச்சி வழக்கு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து, விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

08:59 (IST) 13 Aug 2022
இல்லத்தில் தேசிய கொடி ஏற்றிய அமித்ஷா

75வது சுதந்திர தினத்தையொட்டி இன்று முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் கொடியேற்ற பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், அமித்ஷா, தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார்.

08:17 (IST) 13 Aug 2022
‘தண்டோரா’ முறைக்கு தடை

அரசின் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘தண்டோரா’ முறைக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை கொண்டு வந்தது. பதிலாக மிதிவண்டி அல்லது ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகள் மூலம் விளம்பரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

08:16 (IST) 13 Aug 2022
பிரதமர் விருந்து

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று விருந்தளிக்கிறார்


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.