சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் நானே வருவேன்.
மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் செல்வராகவன் மற்றும் தனுஷ் வெற்றிக் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள்.
சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் அவருடைய ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளனர்.
நானே வருவேன்
கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தை தானு தயாரிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு, செல்வராகவன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தனுஷ் இதில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இந்தப் படத்தின் கதாசிரியரும் தனுஷ்தானாம்.
செல்வராகவன் யுவன்
செல்வராகவனின் முக்கியமான பலமே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான். இருவரது கூட்டணியில் வந்த படங்களின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. அதுவும் செல்வராகவன் தனுஷ் மற்றும் யுவன் இதற்கு முன்னர் புதுப்பேட்டை படத்தில்தான் ஒன்றாக பணிபுரிந்தனர். அந்தப் படத்தின் பாடல்கள் எவ்வளவு பெரிய ஹிட் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. புதுப்பேட்டையை தொடர்ந்து தற்சமயம் நானே வருவேன் படத்தில் மீண்டும் இந்த மூவர் கூட்டணி இணைந்துள்ளது.
கண் பேசும் வார்த்தைகள்
செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா பட பாடல்களில் முக்கியமான பாடல் ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’. நா.முத்துக்குமாரின் வரிகளும் யுவனின் இசையும் காதலிக்காதவர்களை கூட காதலிக்க வைத்துவிடும். முதலில் இந்தப் பாடலுக்கு பதிலாக வேறொரு பாடல் தான் இசையமைத்து, ரெக்கார்டிங், மிக்ஸிங் செய்யப்பட்டு, மாஸ்டரிங்கும் முடிந்துவிட்டதாம். கடைசி நேரத்தில் அந்தப் பாடல் வேண்டாம் என்று யுவனுக்கு தோன்றவே செல்வராகவனிடம் அதனை கூறினாராம். வழக்கமாக பிற இயக்குநர்கள் அந்த நேரத்தில் பாடலை மாற்ற ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் செல்வராகவன் அதற்கு ஒப்புக் கொண்டதால்தான் உடனே உருவான பாடல் ‘கண் பேசும் வார்த்தைகள்’ என்று யுவன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
மெய் சிலிர்த்த செல்வராகவன்
வழக்கமாக அவ்வளவு எளிதாக செல்வராகவன் யாரையும் பாராட்ட மாட்டார். ஆனால் காதல் கொண்டேன் படத்தில் முக்கியமான ஒரு காட்சி தனுஷ் வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் அவரை டஸ்டரால் அடித்து ஒரு கணக்கை போடச் சொல்வார். அந்தக் காட்சிக்கு யுவன் பின்னணி இசையமைத்த பிறகு செல்வராகவனுக்கு போட்டுக் காண்பித்திருக்கிறார். அதைப் பார்த்தவுடன் யுவனின் கையைப் பிடித்து ,”என்னய்யா பண்ணி வச்சிருக்க. பாரு உன்னால கைல முடியெல்லாம் நிக்குது” என்று மெய் சிலர்த்துப் போனதாக அந்தச் சம்பவத்தை யுவன் மட்டும் செல்வராகவன் கூறியுள்ளனர்.