பீட்ரூட், மஷ்ரூம், மசாலா, ஜாப்பனீஸ்… விதவிதமான ஆம்லெட் |வீக் எண்டு ஸ்பெஷல்

பீட்ரூட் ஆம்லெட்

தேவையானவை: 2 ஆம்லெட் செய்ய…

முட்டை – 2

சிறிய பீட்ரூட் – ஒன்று (துருவி தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்)

நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – சில இலைகள்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

சீரகம் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – 3 டீஸ்பூன்

பீட்ரூட் ஆம்லெட்

செய்முறை:

முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு தோசைக்கல்லை சுடவைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஊற்றவும். வெந்ததும் திருப்பிப்போட்டு அடுப்பிலிருந்து எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

மஷ்ரூம் குழி ஆம்லெட்

தேவையானவை: 6 ஆம்லெட் செய்ய…

முட்டை – 2

பட்டன் காளான் – 2

பூண்டு – ஒரு பல்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/8 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

மஷ்ரூம் குழி ஆம்லெட்

செய்முறை:

பட்டன் காளானைக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்து நான்கு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாக அடித்து தனியே வைக்கவும்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தட்டிய பூண்டு, சின்ன சதுரங்களாக வெட்டிவைத்த காளான், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். காளான் வெந்ததும் அடுப்பிலிருந்து எடுத்து தனியாக வைக்கவும்.

குழிப்பணியார கடாயை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியினுள்ளும் அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, முட்டைக் கலவையை முக்கால் குழி நிரம்பும் வரை ஊற்ற வேண்டும். அதிகம் ஊற்றினால் முட்டை பொங்கி வெளியே வடிந்துவிடும்.

முட்டைக் கலவையின் நடுவே ஒரு காளான் துண்டை வைக்க வேண்டும். ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு, மறுபக்கம் வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

ஜாப்பனீஸ் ஆம்லெட் ரோல்

தேவையானவை: ஒரு ஆம்லெட் செய்ய

முட்டை – 4

சோயா சாஸ் – 5 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – கால் டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

ஜாப்பனீஸ் ஆம்லெட் ரோல்

செய்முறை:

முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.

அடுப்பில் நான் ஸ்டிக் பான் (pan) வைத்து எண்ணெய் பூசி சூடாக்கி, முட்டைக் கலவையை சிறிது ஊற்றி நன்றாகப் பரப்பிவிடவும். லேசாக வேக ஆரம்பிக்கும்போது கரண்டி வைத்து நிதானமாகப் பாய் சுருட்டுவது போல் சுருட்டிவிட்டு ஓரத்தில் ஒதுக்கவும்.

பானில் மீண்டும் சிறிது எண்ணெய் தடவி இன்னும் சிறிது முட்டைக் கலவையை ஊற்றி லேசாக வெந்ததும் சுருட்டி வைத்திருக்கும் முட்டைக் கலவையை இதன் மீது சுருட்டவும்.

இதே போல் மீதம் இருக்கும் முட்டைக் கலவை முடியும் வரை ஊற்றி ரோல் செய்துகொண்டே இருக்கவும். முட்டை அதிகம் வேகும் முன்னர் ரோல் செய்தால் முட்டை நன்றாக ஒட்டி ரோல் போன்று வரும். ரோல் செய்து முடித்த உடன் அடுப்பிலிருந்து இறக்கி வெட்டிப் பரிமாறவும். நான் ஸ்டிக் பானில் செய்தால்தான் நன்றாக ரோல் செய்ய முடியும். சதுர பான் இருந்தால் ரோல் செய்ய மிகவும் வசதியாக இருக்கும்.

மசாலா ஆம்லெட்

தேவையானவை: 2 ஆம்லெட் செய்ய

முட்டை – 2

நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – சில இலைகள்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

சிக்கன் 65 மசாலா – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – 2 சிட்டிகை

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – 4 டீஸ்பூன்

மசாலா ஆம்லெட்

செய்முறை:

முட்டையை உடைத்து நன்றாக அடித்துவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கறிவேப்பிலை, வெங்காயம், கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் 65 மசாலா, கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதன் மீது அடித்த முட்டையை ஊற்றி நன்றாகக் கலக்கிவிடவும். வெந்தவுடன் திருப்பிப் போட்டு, மறுபுறம் வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.