சென்னை: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று நடிகர் ரஜினிகாந்த் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதேபோல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான கமல் சுதந்திர தின வாழ்த்துக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
75வது சுதந்திர தின கொண்டாட்டம்
நாடு முழுவதும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஏராளமான திரைப் பிரபலங்கள், தங்களது டிவீட்டர் ப்ரோஃபைல் பிக்சரில் தேசிய கொடியை வைத்துள்ளனர். மேலும், பலர் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தின தியாகிகளுக்கு மரியாதை செலுத்து வருகின்றனர்.
ரஜினியின் சுதந்திரன தின வாழ்த்து
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று முதல் ஆளாக தனது டிவீட்டரில் தேசிய கொடியை ப்ரோஃபைல் பிக்சராக மாற்றினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும், தனது வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து விஜய், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். மேலும், அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என, ரஜினி தனது ட்வீட்டரில் நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார்.
வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய கமல்
ரஜினியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் தற்போது சுதந்திர தின வாழ்த்துக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்து” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘மருதநாயகம்’ படத்தின் தொடக்க விழாவில், பிரிட்டிஷ் மகாராணி முன்னிலையில் கமல் பேசிய வீர வசனத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
என் உளத்தீ இன்னமும் அணையவில்லை
“ஒரு கடலையோ, காற்றையோ, காட்டையோ, குத்தைகைக்கோ, வாடகைக்கோ, சொந்தம் கொண்டாடவோ முடியும் எனும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? இந்த மரத்தின் வயது இருக்குமா உங்களுக்கு? யார் நீங்கள்:? இது என் நாடு, என் தகப்பனின் சாம்பலின் மீது நான் நடக்கிறேன், நாளை என் சாம்பல் மீது என் மகன் நடப்பான்.” என்ற மருதநாயகம் படத்தில் இடம்பெற்ற வசனத்தை குறிப்பிட்டுள்ள கமல், இது சினிமாவிற்காக எழுதியது இல்லை, என் உளத்தீ, அது இன்னமும் அணையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேசியக் கொடி ஏற்ற சொல்லவில்லை!
மேலும், பலரது தியாகங்களால் கிடைத்த இந்த சுதந்திரத்தையும் அதன் வரலாற்றையும் மறந்துவிட்டால், மீண்டும் நாம் அதே நிலைக்கு செல்ல வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ள கமல், வரலாறு மறவோம் மறவோம் என இந்த நாளில் உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார். அன்றைய சுதந்திர போராட்ட வீரர்களையும் இன்றைய முப்படை வீரர்களையும் நன்றியோடு நினைவுகூர்வோம், அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் எனவும், வீரமும் தியாகமும் யாவர்க்கும் உரியவை வளர்த்துக்கொள்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக இந்த அறிக்கையில் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.