1978 -ல் தொடங்கி தற்போது வரை வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து தம் இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நடிகை வடிவுக்கரசி. தற்போது கார்த்தி நடித்துள்ள `விருமன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். விருமன் படம் குறித்தும், தம் திரையனுபவங்கள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.
`விருமன்’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
நான் திருமதி செல்வம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது, இயக்குநர் முத்தையா என்னிடம் வந்து குட்டிப் புலி கதையை சொன்னார். அதுதான் அவரோட முதல் படமும் கூட. ஆனால் நான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் கடைசி நேரத்தில் வேறொருவரை வைச்சு எடுத்துட்டாங்க. அதுக்கப்புறம் அவர் இயக்கின `மருது’ பட டப்பிங்’க்கு கூப்பிட்டாங்க. அதுக்குமே கடைசி நேரத்துல வேறொருத்தரை வச்சு முடிச்சிட்டாங்க. அப்படி இருக்கும்போது இப்ப விருமன் படத்துக்கு மறுபடியும் கூப்பிடும்போது எனக்கு ஒரு சந்தேகம். நிஜமாவே இந்த வாய்ப்பு கிடைக்குமா, இல்ல கடைசி நேரத்துல ஆள மாத்திடுவாங்களானு. அதனால நான் உடனே முத்தையா சார் கிட்ட கேட்டுட்டேன். உடனே அவரு, “போன படங்கள்ல சில சந்தர்ப்பம் சரியா அமைலமா. அதனால தான் கடைசி நேரத்துல அப்படி ஆயிடுச்சு. ஆனா இந்த படத்துல கார்த்தியோட அப்பத்தாவா நடிக்கிறதுக்கு நீங்க தான் சரியா இருப்பிங்க” னு சொன்னார். எனக்கு முதல் மரியாதை படத்துல நடிக்கும் போது எந்தளவுக்கு சந்தோஷமா இருந்துச்சோ, அதே அளவுக்கு சந்தோஷமா இருந்துச்சு.
இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் பெண் அதிதி சங்கர் நடித்துள்ளார். அவரைப் பற்றி…
அதிதிக்கு இது முதல் படம் மாதிரியே தெரில. ஆரம்பத்துல டாக்டர்க்கு படிச்சிட்டு இந்தப் பொண்ணு ஏன் நடிக்க வருதுனு நினைச்சேன். ஆனா அதுக்கப்புறம் தான் புரிஞ்சிது. இந்தப் பொண்ணுக்கு நடிக்கிறதுள்ள எவ்வளவு ஆர்வம் இருக்குனு. எல்லாத்தையும் ஒரே டேக்ல பண்ணிடும். அதிதிக்கு இருக்க தைரியம் வேற யாருக்குமே வராது.
முத்தையா படம் என்றாலே கிராமங்களில் தான் படப்பிடிப்பு இருக்கும். சென்னையை தாண்டி வேறொரு இடத்தில் ரொம்ப நாள்கள் தங்கி நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
முத்தையா சார் டீமே ரொம்ப பாசமா இருப்பாங்க. சென்னைல எந்த சூட்டிங்கா இருந்தாலும், காலைல 10 மணிக்கு தான் நான் வருவேன். ஆனா அங்க காலைல 4 மணிக்கு கூப்பிட்டா கூட சளைக்காம சந்தோஷமா போவேன். அந்த அளவுக்கு அவங்க கூட இருந்தது எல்லாம் சந்தோஷமா இருந்துச்சு. என்ன மட்டுமில்ல, சின்ன ஆர்டிஸ்ட், பெரிய ஆர்டிஸ்ட் எந்தவொரு பேதமும் பாக்காம எல்லாத்துக்கும் ஓரே மாதிரி கவனிப்பு இருந்துச்சு. ரொம்ப வருஷம் கழிச்சு இப்படி ஒரு கம்பெனிய பாக்குறேன்.
கார்த்தியுடன் சேர்ந்து முதல் படம் பண்றிங்க. அவருடைய நடிப்பு எப்படி இருந்தது?
சிவக்குமார் சார் எப்படியோ, அப்படி தான் கார்த்தி தம்பியும். எவ்ளோ பெரிய டயலாக் இருந்தாலும், அத ஒரே டேக்ல பண்ண கூடியவர். அவரு நடிக்கிறப்பலாம் அப்படியே வியந்து பாத்துட்டு இருப்பேன். அவர்கிட்ட கேட்டா, “அப்படியே விடாம வசனம் பேசிறனும்னு பயம் இருந்துட்டே இருக்கும். அந்த பயத்துலயே அப்படியே பேசிருவேன்” னு சொல்வாரு. அந்தத் தன்மை வேற யாருக்குமே வராது. சூர்யாக்கெல்லாம் எப்பவோ தேசிய விருது கொடுத்திருக்கனும். இப்ப கொடுத்ததுலாம் ரொம்பவே லேட். அதே மாதிரி கார்த்திக்கும் நிச்சயம் சீக்கிரமாவே கொடுப்பாங்க.
நேர்காணலின் வீடியோ பதிவு இதோ