மும்பை பங்குச் சந்தையில் மிகப் பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (63). ராகேஷ் எந்தப் பங்குகளை வாங்குகிறார் என்பதை மற்ற முதலீட்டாளர்கள் கவனித்து அதனை வாங்கும் அளவுக்கு பங்குச் சந்தையில் ஜுன்ஜுன்வாலா ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
இன்று காலையில், ஜுன்ஜுன்வாலாவிற்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சேர்க்கும் போதே இறந்திருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். சமீபத்தில்தான் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைக்கு இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜுன்ஜுன்வாலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஜுன்ஜுன்வாலாவின் மரணம் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம் தான் ஆகாஷ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கினார்.
இதன் தொடக்க விழாவிற்கே, ராகேஷ் வீல் சேரில் தான் வந்தார். அவருக்கு பல்வேறு உடல் நலக்கோளாறு இருந்தது. அப்டெக் லிமிடெட், ஹங்கமா டிஜிட்டல் மீடியா நிறுவனங்களின் தலைவராக இருக்கும் ஜுன்ஜுன்வாலா தான் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்களில் இயக்குனராகவும் இருக்கிறார். 1960ம் ஆண்டு பிறந்த ஜுன்ஜுன்வாலா, 1985ம் ஆண்டு வெறும் 5 ஆயிரம் ரூபாயுடன் பங்குச் சந்தையில் நுழைந்தார். 1986ம் ஆண்டு டாடா டீ நிறுவனத்தின் 5 ஆயிரம் பங்குகளை தலா 43 ரூபாய்க்கு வாங்கினார். மூன்று மாதத்தில் அந்த பங்கு 143 ரூபாயாக அதிகரித்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். தான் சம்பாதிக்கும் வருவாயில் 25 சதவீதத்தை தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவைக்கு கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
ஜுன்ஜுன்வாலாவின் மரணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார். தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பியூஸ் கோயல், மறைந்த தொழிலதிபர் ஜுன்ஜுன்வாலாவிற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இந்தியாவின் வாரன் பாபட் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஜுன்ஜுன்வாலாவின் மரணம் இந்திய பொருளாதாரத்தில் ஈடு செய்ய முடியாத ஒன்று என்று தொழில்துறையினர் தெரிவித்தனர்.
ஜுன்ஜுன்வாலா விமான நிறுவனத்தை ஆரம்பித்த போது, விமான போக்குவரத்து துறை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது அதில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, தோல்வியை சந்திக்க தயாராகிவிட்டேன் என்று தெரிவித்தார்.