மதுரை: மதுரையில் பாஜக தொண்டர்கள் நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ.வும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” நேற்று விமான நிலையத்திற்கு வெளியே இருந்த பாஜக தொண்டர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில், அவர்களது உணர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக ஒரு விரும்பத்தகாத நிகழ்வை நடத்தினர். இது அனைவருக்கும் வேதனை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு.
ஏனென்றால், பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், உபசரிப்பு, வரவேற்பு, சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக மதுரை மண் இருக்கிறது. அப்படிப்பட்ட மதுரை மண்ணில் இதுபோன்ற நிகழ்வு என்பது கசப்பான ஒன்று. இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக வீரமரணமடைந்த ராணுவ வீரர் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திவிட்டு, மதுரை விமான நிலையத்தில் இருந்து திரும்பிய, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜக தொண்டர்கள் காலணியை வீசினர். இச்சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.