இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை (Financial Day) கொண்டாடும் அதே வேளையில் நாட்டு மக்கள் நிதிச் சுதந்திரம் (Financial Independence) அடைவது மூலம்தான் அதன் முழு பலனை அடைய முடியும்.
அது என்ன நிதிச் சுதந்திரம்?
நிதிச் சுதந்திரம் என்பது ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தேவையான அனைத்து தேவைகளுக்கான பணம், வருமானமாக அல்லது முதலீடு, செல்வம் மூலம் தொய்வின்றி தடையில்லாமல் வந்துகொண்டிருப்பதாகும்.
நிதித் சுதந்திரம் அடைய திட்டமிடுபவர்கள் செலவு மற்றும் முதலீட்டில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு கீழ்காணும் 8 உத்திகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..
1. சிக்கனம்:
தேவையில்லாத வீண் செலவுகளை தவிர்க்கவும். ஒரு பொருளை சொந்தமாக லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கி செலவு செய்வதை விட, அதனை சில ஆயிரங்கள் செலவு செய்து வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடியுமா என பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு வாரக் கடைசியில் மட்டும் அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை கார் பயன்படுத்துவதாக இருந்தால், சொந்தமாக கார் வாங்குவதை விட அதுவும் கடனில் வாங்குவதை விட, வாடகை காரை எடுத்து பயன்படுத்து லாபகரமாக இருக்கும். இப்படி செய்யும் போது நிதிச் சுதந்திரம் அடைய அதிகமாக முதலீடு செய்ய முடியும்.
கார் கட்டாயம் தேவை என்றால் விலை நல்ல நிலையில் உள்ள பழைய காரை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். போக்குவரத்து வசதி நிறைந்த நகரங்களில் கூடிய வரையில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது உடல் நலத்துக்கும் பண நலத்துக்கும் நல்லது.
2. வாழ்க்கைமுறை செலவுகள்:
வாரம் தோறும் வெளியில் சென்று ஓட்டல்களில் சாப்பிடுவது, சினிமாவுக்கு செல்வது ஆகிய வாழ்க்கைமுறை (Lifestyle) செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ரிவார்ட் பாயிண்ட்கள் கிடைக்கிறது, விலை தள்ளுபடி கிடைக்கிறது என்பதற்காக கிரெடிட் கார்ட்களை பயன்படுத்தி தேவையில்லாத பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும்.
3. கடன் இல்லாத வாழ்க்கை
நிதிச் சுதந்திரம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் கடன் இல்லாத வாழ்க்கையை கொண்டிருக்க வேண்டும். நல்லக் கடன் என்கிற தொழில், வணிக மேம்பாட்டுக்கான கடன், குடியிருக்க வீடு வாங்க கடன் ஆகியவற்றை தவிர மற்ற கெட்டக் கடன்களை (கிரெடிட் கார்ட் கடன், தனிநபர் கடன்) தவிர்க்க வேண்டும். ஏதாவது கடன் இருந்தால் அதனை அடைத்துவிட்டு அதிலிருந்து விரைந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் முதலீட்டுக்கு அதிக தொகை கிடைக்கும்.
4. ஆடம்பரச் செலவு
நீங்கள் தொழில் நிறுவனம் நடத்துபவர் அல்லது வணிகம் செய்பவராக இருந்தால், தேவைக்கு சிறிய கார் ஒன்றை சொந்தமாக வைத்துகொள்ளலாம்.; சொகுசு காரை தவிர்க்கவும். அதேபோல், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களுக்கு பதில் அதே வசதி உள்ள நடுத்தர விலையுள்ள போன்களை பயன்படுத்தலாம்.
5. சம்பளத்தில் அதிக சேமிப்பு
பொதுவாக, சம்பளத்தில் / வருமானத்தில் அதிகப்பட்சம் 30 சதவிகிதம் வரை சேமிப்பு மற்றும் முதலீடாக இருக்க வேண்டும். ஆனால், நிதிச் சுதந்திரம் அடைய திட்டமிட்டிருக்கும் நிலையில் சுமார் 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை சேமிப்பு மற்றும் முதலீடாக இருக்க வேண்டும்.
ஒருவர் அவரின் வருமானத்தில் 10 சதவிகிதத்தை சேமித்தால், அவர் 9 ஆண்டுகள் வேலை பார்க்கும்பட்சத்தில் நிதிச் சுதந்திரம் அடைவதற்கான செலவில் ஒராண்டுக்கு தேவையானதை சேர்த்திருப்பார்.
இதுவே அவர் 25% சதவிகித தொகை சேமித்தால், அவர் 3 ஆண்டுகள் வேலை பார்க்கும்பட்சத்தில் நிதிச் சுதந்திரத்துக்கு தேவையான தொகையில் ஒராண்டுக்கான பணத்தை சேர்த்திருப்பார். இதுவே அவர் 50% சதவிகித தொகையை சேமித்தால், அவர் ஓராண்டு வேலை பார்க்கும்பட்சத்தில் நிதிச் சுதந்திரம் அடைய தேவையான தொகையில் ஒராண்டுக்கானதை சேர்த்திருப்பார்.
இதுவே அவர் 75% சதவிகித தொகையை சேமித்தால், அவர் 4 மாதங்கள் வேலை பார்க்கும்பட்சத்தில் நிதிச் சுதந்திரத்துக்கு தேவையான தொகையில் ஒராண்டுக்கான பணத்தை சேர்த்திருப்பார். அதாவது, சம்பளம் / சம்பாத்தியத்தில் எந்த அளவுக்கு அதிகமாக சேமிக்கிறார்களோ அந்த அளவுக்கு சீக்கிரமாக நிதிச் சுதந்திரம் ஓய்வு பெற முடியும்.
வீட்டுக் கடன் இ.எம்.ஐ அல்லது வீட்டு வாடகை, உணவு செலவுகள், குடும்பச் செலவுகள், பிள்ளைகள் கல்விச் செலவுகள் ஆகியவை இருக்கும் போது, அதிக தொகையை சேமிப்பது என்பது கஷ்டமான காரியம்தான். அதிக சம்பளம் / சம்பாத்தியம் இருந்தால் சாத்தியமாகும். அதற்கு தகுதியை உயர்த்திக் கொள்வது முக்கியம். பகுதி நேர வேலை / தொழில் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் வழியை பார்க்க வேண்டும்.
6. தொடர் முதலீடு
நிதிச் சுதந்திரம் அடைய சேமிப்பு மற்றும் முதலீடுகளை இடை விடாமல் தொடர்வது மிக அவசியமாகும். மிகச் சுருக்கமாக சொல்வது என்றால், அதிகம் சேமிக்க வேண்டும்; குறைவாக செலவழிக்க வேண்டும்; சரியாக முதலீடு செய்ய வேண்டும்.
7. சரியான முதலீடு
இங்கே சரியான முதலீடு என்பது பாரம்பரிய முதலீடுகளான ஃபிக்ஸட் டெபாசிட், எண்டோமென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள், தங்க நகைகள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகளை தாண்டி நவீன முதலீடுகளான பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள்), டிஜிட்டல் தங்கம் (ஆர்.பி.ஐ கோல்டு பாண்டு, கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்), ரெய்ட் என்கிற ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் –ல் முதலீடு செய்து வந்தால்தான் இளம் நிதிச் சுதந்திரம் அடைவதற்கான அதிக தொகுப்பு நிதியை சேர்க்க முடியும். இந்த நவீன முதலீடுகள், பணவீக்க விகித்தை விட அதிக வருமானம் தருபவையாகவும், குறைவான வருமான வரி கட்டுபவையாகவும் இருப்பதால், விரைவில் அதிக தொகுப்பு நிதி சேர உதவி செய்பவையாக இருக்கும்.
8. குடும்ப பட்ஜெட்
மேற்கண்ட அனைத்து விஷயங்களும் நடக்க வேண்டும் என்றால் ஒருவர் குடும்ப பட்ஜெட் போட்டு செலவு செய்வது அவசியமாகும். எது அவசியச் செலவு, எது விருப்பம், எது வீண் செலவு என புரிந்துகொண்டாலே சிறந்த பட்ஜெட்டை போட முடியும்.
அடுத்து செயலற்ற வருமானம் (Passive Income) என்பது ஒருவர் நிதிச் சுதந்திரம் அடைய உதவும். முக்கிய செயலற்றை வருமானங்களாக உதாரணமாக, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி, தொழில், வணிகம், மியூச்சுவல் ஃபண்ட், பங்குகளிலிருந்து கிடைக்கும் டிவிடெண்ட், பென்ஷன், வீட்டு வாடகை, புத்தககம், யூடியூப் புகைப்படங்களுக்கான லாயல்டி ஆகியவை அடங்கும்.
நிதிச் சுதந்திரம்: எவ்வளவு தொகை தேவை?
விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளை தாண்டி செலவு செய்யும் அளவுக்கு அதிக தொகுப்பு நிதி இருந்தால்தான் நிதிச் சுதந்திரம் நீண்ட காலத்துக்கு தொடரும். மேற்கண்ட முறையில் செலவு குறைப்பு, அதிக சேமிப்பை மேற்கொள்ளவில்லை என்றால் சம்பளத்தை உயர்த்துவது மூலம் சீக்கிரம் நிதிச் சுதந்திரம் அடையலாம். இல்லை என்றால் நிதி தானமாக பணி ஓய்வை ஒட்டி நிதிச் சுதந்திரம் அடையலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை.
நிதிச் சுதந்திரம் முதல் ஆண்டில் செலவுக்கு எவ்வளவு தொகை தேவையோ, அதனை போல் சுமார் 25 மடங்கு தொகை, தொகுப்பு நிதி ஒருவரிடம் சேர்ந்துவிட்டால், அவர் தாரளமாக நிதிச் சுதந்திரம் அடையலாம்.
உதாரணத்துக்கு, கணவன், மனைவி இருவருக்கு மளிகை செலவுகள், மருத்துவச் செலவுகள், மருத்துவக் காப்பீடு பிரீமியம், போக்குவரத்து செலவுகள், பொழுது போக்கு செலவுகள், எல்லாம் சேர்ந்து மாதம் ஒன்றுக்கு ரூ.50,000 தேவை என வைத்துக் கொள்வோம். அதாவது ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் தேவை. இதன் 25 மடங்கு என்பது ரூ.1.5 கோடியாகும். இந்த அளவுக்கு தொகுப்பு நிதி இருந்தால், அவர்கள் இருவரும் நிதிச் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என சொல்லலாம். இந்த ரூ. 1. 5 கோடியிலிருந்து ஆண்டுக்கு 4 சதவிகித தொகையை அதாவது ரூ. 6 லட்சம் எடுத்து செலவிட்டால், பணமும் பெருகி வரும். பணமும் நீண்ட காலத்துக்கு வரும். இந்தப் பணம் தாராளமாக இன்னும் 25,30 ஆண்டுகளுக்கு வரும் என்பதால் அவர்கள் எந்த வேலையையும் செய்யாமல் அவர்களின் ஓய்வுக் காலத்தை நிதிச் சுதந்திரத்துடன் கழிக்க முடியும்.
இந்தத் தொகையை ஒருவர் அவரின் 45,50 வயதில் சேர்த்தாலும் அவர் நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும். நீங்களும் நிதிச் சுதந்திரம் அடைய, இந்த 75வது சுதந்திர தினத்தில் உங்களை நாணயம் விகடன் வாழ்த்துகிறது!