புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருந்து முதன் முதலாக அதிக மதிப்பெண் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானவர் ஷா பைசல். இவரது தந்தை கடந்த 2002ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார். ஷா பைசல் கடந்த 2019ம் ஆண்டு தனது அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஈடுபட்டார். ‘காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்ற கட்சியை தொடங்கினார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு, அரசியலை விட்டு விலக பைசல் முடிவு செய்தார். மீண்டும் அரசு பணியில் சேர விருப்பம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், தனது ராஜினாமாவை திரும்ப பெறுவதாக கூறி ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். இது பற்றி ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திடம் ஒன்றிய அரசு கருத்து கேட்டது. அதன் அடிப்படையில், கடந்த ஏப்ரலில் அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ஒன்றிய சுற்றுலா துறையின் துணைச் செயலாளராக நேற்று அவர் நியமிக்கப்பட்டார்.