புதுடெல்லி: உத்தரப்பிரதேச மடத்தின் தலைவரான துறவி யத்தி நரசிங்காணந்த், வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவதைப் புறக்கணிக்கக் கோரியுள்ளார். இதற்கு அக்கொடிகளை முஸ்லிம்கள் தயாரிப்பது காரணமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்திப் மகாகால் தாஸ்னா மடத்தின் தலைவராக இருப்பவர் யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி. சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு பெயர் போன இவர் வெளியிட்ட ஒரு வீடியோவும் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் துறவி நரசிங்காணாந்த், “மேற்கு வங்க மாநில முஸ்லிம்களால் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. எனவே, வீடுதோறும் தேசியக்கொடி என்பதற்கு பதிலாக காவிக்கொடியை ஏற்றுங்கள். தேசியக்கொடிகளை தயாரிக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம் பெற்றிருப்பவர் மேற்கு வங்க மாநிலத்தின் சலாவுத்தீன்.
நான் இந்துக்களிடம் கோருவது என்னவெனில், வீடுதோறும் தேசியக்கொடி நிகழ்ச்சியைப் புறக்கணியுங்கள். இதற்கு பதிலாக காவிக்கொடியை வீடுகளில் ஏற்ற பரிந்துரைக்கிறேன்.தேசியக்கொடியை கண்டிப்பாக ஏற்ற விரும்புபவர்கள் தங்கள் வீடுகளில் பழைய தேசியக்கொடிகள் இருந்தால் அவற்றை ஏற்றுங்கள். தவிர, தற்போது முஸ்லிம்களால் தயாரிக்கப்பட்டதை ஏற்ற வேண்டாம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்துக்களிடம் தேசியக்கொடிகளுக்கான விலையை பெற்று அந்தப் பணத்தில் இந்துக்களை கொல்ல சதி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
யத்தி நரசிங்காணந்த், கடந்த வருடம் டிசம்பரில் துறவிகள் ஹரித்துவாரில் நடத்திய தர்மசபையின் மூலம் பிரபலமானவர். இதில், அவர் மதவெறுப்பு உரை நிகழ்த்தி, வழக்கில் சிக்கினார்.
பாஜகவின் பல தேசிய, மாநிலத் தலைவர்களுடன் நட்பு கொண்டுள்ள துறவி யத்தி நரசிங்காணந்தின் மடத்திற்கு 2014 முதல் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் சென்று வருவது உண்டு.
தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்ஸேவின் அனுதாபி என தன்னை கூறிக்கொள்பவர் இந்த சாது நரசிங்காணந்த். இவர், 2013 முசாபர்நகர் மதக்கலவர வழக்கிலும் சிக்கி ஜாமீன் பெற்றுள்ளார்.