சிவகங்கை: வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள், பொதுமக்களைப் பார்த்து அமைச்சர், இங்கு நிற்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்லியிருக்கிறார். எனவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை காரைக்குடியில் இன்று செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அண்ணன் பிடிஆர், நாட்டிற்காக காஷ்மீரில் வீரமரணமடைந்த லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தவந்தார். அதே இடத்தில் மதுரை மாவட்ட பாஜகவினரும், மாவட்டத் தலைவரும் இருக்கிறார்.
எனக்கு மாவட்டத் தலைவர் கூறியது என்னவென்றால், பாஜகவினர் வெளியே செல்ல வேண்டும், யாரும் உள்ளே வரக்கூடாது.நீங்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்றொரு வார்த்தையை பிடிஆர் பயன்படுத்தியிருக்கிறார். இதை எப்படி பாஜக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.
நான் ஒரு வன்முறையை கையில் எடுக்கக்கூடிய ஒரு கட்சியை வழிநடத்தவில்லை. வன்முறையை கையில் எடுக்க வேண்டுமென்று தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்போவதும் கிடையாது.பாஜக அமைதியை விரும்பும் கட்சி.
பாஜகவின் தொண்டர்களோ, பொதுமக்களோ, அதுபோல் தலைவருக்கு எதிராக செய்திருந்தால், தொண்டர்களிடம் நான் பேசி, அவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியிருப்பேன். காலணி வீச்சு நடந்திருக்கக்கூடாது.
அதேநேரம் அமைச்சர் அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்களையோ, பொதுமக்களையோ பார்த்து, இங்கு நிற்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்கிறார் என்றால், அந்த அமைச்சர் பதவி விலக வேண்டும்.
மதுரை மதுரைதான். மதுரை மக்கள் மதுரை மக்கள்தான்.மதுரை மக்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். தன்னை யாராவது உதாசீனப்படுத்தினால், அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். குறிப்பாக தன்னை யாராவது சீண்டிப்பார்த்தால் அதை பொறுத்துக் கொள்ளக்கூடியவர்கள் அல்ல மதுரை மக்கள். இதிலே பாஜக தொண்டர்களை அமைச்சர் ஏன் சீண்டிப்பார்க்க வேண்டும். எதற்காக தகுதியற்றவர்கள் என்று சொல்ல வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் அமைச்சரிடம் காரணம் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.