நாடாளுமன்ற வளாகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து ஹரியானாவின் பானிபட்டில் நடந்த 900 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2ஜி எத்தனால் ஆலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “அமிர்த பெருவிழா காலகட்டத்தில், நாடு முழுவதும் மூவர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இந்தப் புனிதமான நிகழ்வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், நமது மன உறுதிகொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நபர்களின் மனப்பான்மையைப் புரிந்துகொள்வது தேவையான ஒன்று.
நம் நாட்டில் உள்ள சிலர் இதுபோன்ற எதிர்மறையான சிந்தனையில் சிக்கியிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய இதுபோன்ற நபர்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. மத்திய அரசுக்கு எதிராக உள்ளவர்கள் பிளாக் மேஜிக்கை நோக்கிச் செல்கின்றனர். ஆகஸ்ட் 5-ம் தேதி காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட காங்கிரஸ் கறுப்பு உடை போராட்டம் பிளாக் மேஜிக் மனப்பான்மையை, வெறுப்பை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சி. கறுப்பு உடைகள் அணிவதன் மூலம் அவர்களது மோசமான சிந்தனைக்கு முடிவுவரும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கறுப்பு மேஜிக் மற்றும் மூட நம்பிக்கைகள் பற்றி அவர்கள் அறியாதவர்கள் என்பதோடு மக்களின் நம்பிக்கையை அவர்கள் இனி பெற முடியாது என்பதையும் காட்டுகிறது” எனப் பேசினார்.
கறுப்பு டிரஸ் அணிபவர்கள் குறித்து மோடி பேசியது குறித்தும், காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கறுப்பு உடை போராட்டம் குறித்தும் இரு தரப்பிலும் மாறி மாறி புகார் சுமத்திக்கொள்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் ரியாக்ஷன்கள் குறித்த சிறு தொகுப்பு…
``காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்தியிருக்கிறது. அதுவும் நாடு தழுவிய அளவில் கறுப்பு உடை அணிந்து போராடி இருக்கின்றனர். இந்தப் போராட்டத்தை அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கிய நாளில் கறுப்பு உடை அணிந்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தியிருக்கின்றனர். இதன்மூலம் இந்திய நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் அவமதித்திருக்கிறது. அதுமட்டுமல்ல அயோத்தி கட்டுமானப் பணிகளையும் காங்கிரஸ் அவமதித்துவிட்டது. நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மாண்புகளையும் காங்கிரஸ் அவமானப்படுத்திவிட்டது” எனச் சாடியிருந்தார் அமித் ஷா.
இது குறித்த கேள்விக்கு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “கறுப்புச் சட்டை அணிந்து வந்து போராடுவதால் மட்டும் எங்களை ஒன்று செய்துவிட முடியாது என நாடாளுமன்றத்தின் வெளியே கறுப்பு உடை அணிந்து போராடியவர்களை மட்டுமே குறிப்பிட்டுப் பிரதமர் பேசினார். ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் கூடத்தான் கறுப்பு உடை அணிந்து செல்கிறார்கள். அதற்காக ஐயப்ப பக்தர்களை மோடி புண்படுத்திவிட்டார் என்று சொல்லிவிட முடியுமா?” எனப் பதிலளித்துள்ளார்.
மோடியின் கருத்துக்கும், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்புக்கும் பதிலளிக்கும் பா.ஜ.க-வினர் அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானத்தையும் அவமதித்ததாகவே குற்றம்சாட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சி தரப்பில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டில் நிலவி வரும் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் தெரியவில்லை. சுரண்டலை மறைக்க, பிளாக் மேஜிக் போன்ற மூட நம்பிக்கை வார்த்தைகளைப் பயன்படுத்தி, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதையும், நாட்டைத் தவறாக வழி நடத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். முக்கிய பிரச்னைகளுக்கு பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்” என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் கறுப்புச் சட்டையை அணிந்திருந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார். சனாதன தர்மத்தை நம்புவோரைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்து மக்களின் நம்பிக்கையையும் சம்பாதித்தவர் பெரியார்” என ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
“ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்றத்தில் கறுப்பு ஆடை அணிந்து போராடியவர்களை வசைமாரி பொழிந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பா.ஜ.க-வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. போராடிய எல்லோரும் தொகுதிகளுக்கு வந்துவிட்டோம். ஆனாலும் பிரதமர் என்றும் பாராமல் கறுப்பு அவரை தொந்தரவு செய்துகொண்டே இருந்திருக்கிறது. அதுதான் கறுப்பு” என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், “அன்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே உங்களைத் தொந்தரவு செய்வது கறுப்பு நிறமா? அல்லது அதை அணிந்திருப்பவரா” எனக் கறுப்பு ஆடை அணிந்திருக்கும் ராகுல் காந்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். ஆடை மற்றும் நிறம் தொடர்பான அரசியலைத் தவிர்த்து மக்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. அதைப் புரிந்துகொண்டு இரு தேசிய கட்சிகளும் நடந்துகொள்ள வேண்டும்..!