'சிண்ட்ரெல்லா தனது காலணியைப் பெற்றுக் கொள்ளலாம்' – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: “மதுரை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள், கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட சிண்ட்ரெல்லா, தனது ஒற்றைக் காலணியை திரும்ப பெற விரும்பினால், அதை எனது ஊழியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” நேற்றைய சம்பவம் குறித்து பிறகு விரிவாகப் பேசுகிறேன். மதுரை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள், கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட சிண்ட்ரெல்லா, தனது ஒற்றைக் காலணியை திரும்பப் பெற விரும்பினால், அதை எனது ஊழியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் நேற்று மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அந்தப் பகுதியில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜகவினரும் காத்திருந்தனர்.


— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) August 14, 2022

இந்நிலையில் அரசு நிகழ்ச்சிக்கு இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர்? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால், அமைச்சருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, திரும்பிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், காவல்துறையினர், அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து அமைச்சரின் கார் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.