நடிகர் சோனு சூட் கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்ததன் மூலம், மக்கள் மத்தியில் ஹீரோவார். சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு வாகன வசதி, உயிர் காக்கும் ஆக்ஸிஜன் உட்பட அனைத்து உதவிகளையும் சோனு சூட் செய்துகொடுத்தார். கொரோனா காலத்தில் தொடங்கிய சேவையை சோனுசூட் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அதோடு திரைப்படத்துறையில் நுழையவேண்டும் என்ற நோக்கத்தோடு மும்பை நோக்கி வருபவர்களுக்கு உதவி செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கவும் முடிவு செய்துள்ளார். தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த சேவைகளை செய்து வருகிறார் அவர். சோனு சூட் வீட்டிற்கு தினமும் உதவி கேட்டு நூற்றுக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கின்றனர். வார விடுமுறை நாள்களில் 500 முதல் 700 பேர் சோனு சூட் வீட்டிற்கு வெளியில் வரிசையில் நிற்பதை காணமுடிகிறது. மற்ற நாள்களில் தினமும் 200 பேர் வரை சோனு சூட் வீட்டிற்கு உதவி கேட்டு வருகின்றனர். அதோடு தினமும் சமூக வலைதளம் மூலம் 30 முதல் 40 ஆயிரம் பேர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு தகவல்களை பதிவிடுகின்றனர்.
மக்கள் ஏராளமானோர் சோனு சூட் வீட்டிற்கு வெளியில் வரிசையில் நிற்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. தன்னிடம் உதவி கேட்டு மக்கள் வருவது குறித்து சோனு சூட் நேர்காணல் ஒன்றிலும் தெரிவித்திருந்தார். “வீட்டிற்கு வெளியில் நிற்கும் இந்த வரிசை தினமும் பார்க்கக்கூடியதுதான். நாடு முழுவதுமிருந்து தினமும் 500 முதல் 700 பேர் வரை உதவி கேட்டு வருகின்றனர்” என்றார். அவர்களால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படவில்லையா என்று கேட்டதற்கு, “அது போன்ற பிரச்னை எதுவும் ஏற்படுவதில்லை. பக்கத்துவீட்டுக்காரர்களே இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இந்தக் கட்டடம் தேவைப்படுபவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடியது என்று அதில் வசிப்பவர்கள் நம்புகின்றனர்” என்று தெரிவித்தார்.