Amrit Mahotsav: இந்திய விடுதலையில் முக்கிய பங்காற்றிய 5 இடங்கள்

75th anniversary of Independence: இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் இந்தியா சுதந்திரம் பெற்று  75 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவை கொண்டாடுகிறோம். சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, நாட்டின் அனைத்து புராதன இடங்களுக்கும் செல்ல கட்டணம் செலுத்தத் தேவையில்லை என தொல்பொருள் ஆய்வுத் துறை,அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 15 வரை, எந்த தொல்லியல் தளங்களிலும் கட்டணம் செலுத்த வேண்டாம்.நாட்டு சுதந்திரத்துடன் தொடர்புடைய 5 முக்கியமான வரலாற்று இடங்கள் இவை…

விடுதலை போராட்ட வீரர்களை அடைத்து வைக்க ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சிறை செல்லுலர் சிறை. இந்த சிறைக்கு காலா பானி என்றும் பெயர் உண்டு. இந்த சிறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​நாட்டின் பல சிறந்த புரட்சியாளர்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் இங்கு அடைக்கப்பட்டனர்.

இங்கு சிறை வைக்கப்பட்டவர்கள் கடுமையான தண்டனை மற்றும் சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்தியா சுதந்திரத்திற்காக போராடிய ​​பல சுதந்திர போராட்ட வீரர்கள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். படுகேஷ்வர் தத், யோகேஷ்வர் சுக்லா, விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.

கம்பெனி பாக் என்பது 1931ல் புரட்சியாளர் சந்திரசேகர் ஆசாத் பிரிட்டிஷ் வீரர்களுடன் தனியாகப் போரிட்டு, ஒரே ஒரு தோட்டா மீதம் இருந்தபோது, ​​அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இடம். இந்த பூங்கா 1870 இல் இளவரசர் ஆல்பிரட் பிரயாக்ராஜுக்கு வருகை தந்ததன் அடையாளமாக கட்டப்பட்டது.

இதன் காரணமாக இது முன்பு ஆல்பிரட் பார்க் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இது ஆங்கிலேயர்களால் கம்பெனி பாக் என்று அழைக்கப்பட்டது, தற்போது இது சந்திரசேகர் ஆசாத் பூங்கா என்று அழைக்கப்படுகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதே இடத்தில்தான் மகாத்மா காந்தி 1942 ஆகஸ்ட் 9 அன்று ஆங்கிலேயருக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். தற்போது இந்த இடம் கவேலி மைதானம் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சாபின் மிகப்பெரிய நகரமான அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ளது. இந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் மிகக் கொடூரமான சம்பவத்தை விவரிக்கிறது.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பைசாகி பண்டிகை நாளன்று, ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக் கொள்கை, ரவுலட் சட்டம் மற்றும் சத்யபால் மற்றும் சைபுதீன் கைதுக்கு எதிராக ஜாலியன்வாலாபாக்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜெனரல் டயரின் உத்தரவின் பேரில், பிரிட்டிஷ் வீரர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்தியர்களை சுட்டுக் கொன்றனர். ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் விடுதலை போராட்டத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லும் உந்துசக்தியாக அமைந்தது என்று கூறினால் அது மிகையாகாது.  

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ககோரி சம்பவம் தனி முக்கியத்துவம் வாய்ந்தது. 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, லக்னோவில் உள்ள ககோரி நிலையத்திற்கு அருகில், ராம்பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர் ஆசாத், அஷ்பக் உல்லா கான் மற்றும் ராஜேந்திர லஹிரி போன்ற புரட்சியாளர்கள் சஹாரன்பூர்-லக்னோ பயணிகள் ரயிலை  கொள்ளையடித்தனர்.

காகோரியில் பஜ்நகர் அருகே நடத்தப்பட்ட கொள்ளையின் மொத்தத் மதிப்பு ரூ.4,601, 15 அணா மற்றும் 6 பைசா, இந்த குற்றம் தொடர்பான எஃப்.ஐ.ஆர் நகல், இன்னும் காகோரி காவல் நிலையத்தில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.