கடலோரத்தில் போராட்ட தீயை பற்ற வைத்த| Dinamalar

கர்நாடக கடலோரத்தில், சுதந்திர போராட்ட தீயை பற்ற வைத்தது உப்பு. கடற்கரையில் இலவசமாக ஏராளமாக கிடைப்பது உப்பு. இங்குள்ள மக்களின் உயிர்நாடியாக இருந்தது. இத்தகைய உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்தனர்.நாட்டுக்கே உப்பு தயாரித்து வினியோகித்த, நாட்டின் இரண்டு கடலோர பகுதி மக்கள், கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர். மகாத்மா காந்தி 1930ல், உப்பு சத்தியாகிரகத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு அன்றைய காங்கிரஸ் கட்சியின் நெட் ஒர்க் வழியாக, கடலோர மாவட்டங்களை சென்றடைந்தது. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்களுடன், 24 நாட்கள் பாதயாத்திரையாக தண்டி கடற்கரைக்கு வந்தார்.

இங்கு உப்பு தயாரித்து, போராட்டத்தை துவங்கினார்.அன்றைய கர்நாடக காங்கிரசின் முடிவுபடி, கடலோர மாவட்டமான உத்தரகன்னடாவின், அங்கோலாவில் உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. அதே போன்று உடுப்பியிலும், உப்பு சத்தியாகிரகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்ய, ஆங்கேங்கே கூட்டங்கள் நடந்தன. காந்தியின் அழைப்பை ஏற்று, சத்தியா கிரகம் நடத்த மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கடலோர பகுதி தலைவர்களான பனியாடி, பங்காள சகோதரர்கள், கர்னாடு சதாசிவ ராயர், விட்டல காமத் சத்தியா கிரக போராட்டத்தை வழி நடத்தினர். 1930 ஏப்ரல் 13ல் காலை 6:00 மணிக்கு, ரத வீதியில் பிரார்த்தனை செய்து, அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், மூவர்ண கொடியை ஏந்தி, வந்தே மாதரம் என கோஷமிட்டு, மல்பே கடற்கரைக்கு வந்தனர்.

கடல் நீரை பாத்திரங்களில் நிரப்பி வந்து, தென்னந்தோப்பில் அடுப்பு பற்ற வைத்து, தண்ணீரை காய்ச்சி நாள் முழுதும், உப்பு தயாரித்தனர். இந்த உப்பை பொட்டலம் கட்டிக்கொண்டு, ஊர்வலமாக மீண்டும் உடுப்பிக்கு திரும்பினர். இங்குள்ள ஜட்கா வண்டிகள் நிறுத்துமிடத்தில், ஏலம் விட்டனர். அப்போது ஆங்கில அரசின் போலீசார், தடியடி நடத்தி உப்பை ஜப்தி செய்தனர்.இந்த சம்பவம் கடலோரத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படுபித்ரி, காபு, உத்யாவரா, மட்டு, பாண்டேஸ்வரம், குந்தாபுரா, மரவந்தே, கார்வார், பட்கல் என, மங்களூரிலிருந்து, பட்கல் வரை எங்கெங்கு கடற்கரை உள்ளதோ, அங்கெல்லாம் மக்கள் கூட்டம் சேர்ந்து, உப்பு தயாரித்து ஆங்கிலேய அரசுக்கு, பாடம் புகட்டினர்.கடற்கரை பகுதிகள் மட்டுமின்றி, மூடுபிதரே, கார்கல், சிக்கமகளூரு, ஷிவமொகாவின் மக்களும் கூட, கடற்கரைக்கு வந்து உப்பு தயாரித்து, சத்தியா கிரகத்தில் பங்கேற்றனர். இந்த சத்தியா கிரகம், மக்களிடம் சுதந்திர போராட்ட உணர்வை அதிகரித்தது.இதை நினைவுகூரும் நோக்கில், மல்பேவில் சத்திய கிரக போராட்டம் நடந்த இடத்தில், தற்போது காந்தி உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

– நமது சிறப்பு நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.