ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்று, அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து, அவர் குடும்பத்தினருடன் உணவருந்தினார். அப்போது அப்துல் கலாமின் பேரன், அப்துல் கலாம் கடைசியாக பயன்படுத்திய பேனாவை அண்ணாமலைக்கு பரிசளித்தார்.
அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கடற்படை தளத்திலிருந்து விசைப்படகில் தேசியக்கொடியை ஏந்தியபடி கோதண்ட ராமர் கோயில்வரை மீனவர்களுடன் கடலில் வலம் வந்தார். அதன் பின்னர் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுப்படகு மீனவர்கள் 75 பேருடன், 75 தேசியக்கொடிகளுடன் குந்துகால் துறைமுகத்திலிருந்து விவேகானந்தர் மணிமண்டபம் வரை கடலில் சுற்றுப்பயணம் செய்தார்.
நிகழ்ச்சிகள் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பேசும்போது, “மீனவர்களுடன் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கடலில் தேசியக்கொடியுடன் சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளோம். தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு கடற்பரப்பு கொண்ட மாவட்டமாக ராமநாதபுரம் விளங்குகிறது. இங்கிருந்து மிக அருகாமையில் உள்ள இலங்கை, தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறை பிடித்து வருவதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருவதுமாக இருக்கிறது. மத்திய அரசு சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டு கொண்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கச்சத்தீவால் இலங்கைக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. கச்சத்தீவில் தமிழர்களுக்கும் உரிமை உண்டு என்பதை இலங்கை அரசு மாற்றி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என நாங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம், அது நிச்சயமாக நடக்கும் என்பது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
மதுரையில் ராணுவ வீரரின் இறுதி நிகழ்வில் நடந்த சில தேவையற்ற சம்பவங்கள், நடந்திருக்கக் கூடாதவை. ஒருவேளை நான் முன்கூட்டியே சென்றிருந்தால் அமைச்சருடனான அந்த வாக்குவாதத்தை தடுத்து நிறுத்தியிருப்பேன். நான் அங்குசென்றபோது தொண்டர்கள் அனைவரும் மிகவும் ஆவேசத்துடன் காணப்பட்டனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி வைத்திருந்தேன்.
நான் அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட பிறகு இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனால்தான் தொண்டர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். இதற்காக அவர்கள் செய்தது சரி என நான் சொல்லவில்லை. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் பா.ஜ.க-வினர்தான் காரணம் எனக்கூறுவதைத் தான் மறுக்கிறேன்.
அமைதியை மட்டுமே விரும்பும் கட்சிதான் பா.ஜ.க. இதுபோன்ற கட்சி சித்தாந்தத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது என நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதே நேரத்தில் சம்பந்தமே இல்லாத அப்பாவி இளைஞர்களை கைதுசெய்வது நியாயம் கிடையாது.
நேற்று மதுரையில் நடந்த அந்த நிகழ்வைத் தொடர்ந்து, மாவட்டத் தலைவராக இருந்த சரவணன், என்னை தொடர்பு கொண்டு, `நான் என்னுடைய தாய் கழகத்திற்கு திரும்புகிறேன்’ எனத் தெரிவித்தார். நான், `சரி உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்’ எனத் தெரிவித்தேன். கட்சியில் இணைவதும், வேறு கட்சிக்கு செல்வதும் அவரவர் உரிமை, அதனை நாங்கள் தடுத்து நிறுத்த முடியாது. அவர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க எனக்கூறியதால் கட்சித் தலைமைக் குழு முடிவெடுத்து அவரை பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. கட்சியைவிட்டு வெளியேறும் சகோதர, சகோதரிகளைப் பற்றி நான் தவறாக பேசுபவன் கிடையாது. எங்களைபொறுத்தவரை அடுத்த தலைவர் தயாராக உள்ளார். அவர் அந்த பொறுப்புகளை ஏற்று கட்சிப் பணிகளை மேற்கொள்வார்.
திருவாரூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட புகாரில், அந்த மாவட்ட பா.ஜ.க தலைவர் கைதுசெய்யப்பட்டது சம்பந்தமாக, அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசினேன். அவர் ஆள்மாறாட்டம் செய்தததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அதனடிப்படையில் கைதுசெய்துள்ளதாகவும் கூறினார். சரியான ஆதாரங்கள் இருந்தால் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்றும், பா.ஜ.க சட்டத்தின் பாதையை தடுக்காது, சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று தெரிவித்தேன்” என்றார்.