மதுரை: மது குடித்துவிட்டு வந்தால் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க மதுரை கம்பூர் ஊராட்சி தடை விதித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. இந்தக் கூட்டங்களில் பங்கேற்க கிராம பஞ்சாயத்துகள் சார்பில் போஸ்டர் அடித்தும், வாட்ஸ் அப் மூலமும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம், கம்பூர் ஊராட்சியில் மற்ற கிராம பஞ்சாயத்துகளை போல் நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அந்த கிராம பஞ்சாயத்து அழைப்பு விடுத்துள்ளது. காலை 11 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் பஞ்சாயத்திற்குட்பட்ட அலங்கம்பட்டி, பெரிய கற்பூரம் பட்டி, சின்ன கற்பூரம் பட்டி, அய்வத்தான் பட்டி, தேனக்குடிப்பட்டி, கோவில்பட்டி மற்றும் கம்பூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த குறைநிறைகளை தெரிவித்தால் அவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிறைவேற்றப்போகும் தீர்மானங்களைப் பற்றி விவாதிக்க பொதுமக்கள் பார்வைக்கு அவற்றை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கிராம சபை கூட்டத்தில் மது குடித்துவிட்டு வந்தால் பங்கேற்பதை தவிர்ப்பது எனவும், மீறி வந்தால் பங்கேற்க தடை எனவும் கிராம மக்களும், பஞ்சாயத்தும் முடிவு செய்துள்ளனர்.
இந்த பஞ்சாயத்தின் கிராம இளைஞர்களே ஒன்று கூடி கிராம சபை கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்வது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.