தாம்பத்திய உறவு பலருக்கும் இன்பமானதொரு வைபவமாக இருக்க, ஒரு சிலருக்கு மட்டும் அது வலிமிகுந்த அனுபவமாகி விடுகிறது. நம்முடைய வாசகி ஒருவர் தானும் இப்படிப்பட்ட வேதனையில் இருப்பதாக நமக்கு மெயில் செய்திருந்தார்.
‘திருமணமான புதிதில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளும்போதுதான் பிறப்புறுப்பு வலிக்கும். ஆனால், தற்போது, உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாலே பிறப்புறுப்பு வலிக்கிறது. எனக்கு என்ன பிரச்னை ‘ என்று கேட்டிருந்தார். வாசகிக்கான பதிலை, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி சொல்கிறார்.
”நீங்கள் கடவுள் என்று நம்பினாலும் சரி, இயற்கை என்று சொன்னாலும் சரி… ‘தாம்பத்திய உறவில் ஏன் சுகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது’ என்பதை கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். சுகம் கிடைப்பதால்தான் மனிதர்கள் உறவில் ஈடுபடுகிறார்கள். தன் மனதுக்கும் உடலுக்கும் சுகம் தருகிற ஒரு செயலை அப்படியே ஏற்றுக்கொண்டு அனுபவிக்காமல், ‘செக்ஸ் பாவம்’, ‘செக்ஸ் புனிதம்’ என்று அவரவர்க்கு ஒரு கருத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள்ளாகச் சிக்கிக் கொண்டார்கள் மனிதர்கள். செக்ஸை பற்றி இங்கே பலருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே சுகம் தர வேண்டிய தாம்பத்திய உறவு, சிலருக்கு வலி நிறைந்த உறவாகி விடுகிறது.
செக்ஸில் ஈடுபடும்போது மனைவி உணர்ச்சிவசப்பட்டு பிறப்புறுப்பில் நீர் ஊறினால்தான், அவருக்கு உறவு வலியில்லாமல் இனிமையாக இருக்கும். மெஷினின் இரண்டு பாகங்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது ஆயில் போடுவதுபோல இதுவும். இந்தத் தெளிவு கணவனுக்கு இல்லாதபட்சத்தில், நீர் ஊறுவதற்கு முன்னரே மனைவியுடன் இணைய முயற்சி செய்வான். விளைவு, மனைவிக்கு தாம்பத்திய உறவு, வலி நிறைந்த உறவாகிவிடும்.
`எல்லோரும் செக்ஸை என்ஜாய் செய்கிறார்கள். எனக்கு மட்டும் மகிழ்ச்சியே இல்லையே… வலிக்கிறதே’ என்று சம்பந்தப்பட்ட பெண்கள் தாம்பத்திய உறவையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உறவு கொள்வதுபற்றி நினைத்தாலே பிறப்புறுப்பு வலிக்க ஆரம்பித்து விடும்.
கணவனுக்கு மனைவியைப் பார்த்தாலே உறவு கொள்வதற்கான தூண்டுதல் கிடைத்து விடும். ஆனால், மனைவிக்கோ செக்ஸ் தொடர்பான அடுத்தகட்ட எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் அந்த நேரம் மனதுக்குள் அலைமோதும். உதாரணத்துக்கு, ‘இந்த உறவால உடனே கன்சீவ் ஆயிடுவோமோ’, ‘கர்ப்பமாயிட்டா வாந்தி, உடல் அசதின்னு கஷ்டப்படுவோமோ’, ‘அப்படிக் கஷ்டப்பட்டா இவர் என்னைப் பார்த்துப்பாரா’ … இப்படி பல எண்ணங்கள் அலைமோதும்.
மற்ற நேரங்களிலும் இந்த எண்ணங்கள் தோன்றும் என்றாலும், கணவன் உறவுக்கு முயற்சி செய்யும் நேரத்தில் அதிகமாக இருக்கும். தன் மனதுக்கேற்றபடி கணவர் சப்போர்ட் செய்வார் என்பது உறுதியாகிவிட்டால், அந்த மகிழ்ச்சியிலும் செளகர்யத்திலும் உணர்ச்சிவசப்பட்டு ஈடுபடுவார்கள். அப்படி ஈடுபடுகையில் வலி வராது.
தவிர, உறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் ஈடுபடுவது, அன்பாக இருப்பது, நகைச்சுவையாகப் பேசுவது என்று கணவன் நடந்து கொண்டால், மனைவியின் பிரைவேட் பார்ட்டில் நீர் ஊறும்; உறவு கொள்ள ஆசை வரும்; மறுபடியும் மறுபடியும் கணவனுடன் சேர வேண்டுமென்கிற ஆசையும் வரும்.
திருமணமான பெண்ணின் பிறப்புறுப்பில் வலி வருவதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. ஆண்கள் தங்கள் பிறப்புறுப்பின் முன்தோலை பின்னுக்குத் தள்ளி தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் செய்யவில்லையென்றால், துர்வாடை, கிருமி என்று சுத்தமில்லாமல் இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தங்கள் மனைவியுடன் உறவுகொள்கையில் அவருடைய பிறப்புறுப்பிலும் கிருமித்தொற்று ஏற்பட்டு வலி வரும்.
இவையெல்லாம் பெரும்பாலான ஆண்களுக்குத் தெரிவதில்லை. அவர்களைச் சொல்லியும் தவறில்லை. வாழ்ந்தவர்கள் இதுபற்றி தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. இதனால்தான் பாலியல் கல்வி முக்கியம் என்பதை வற்புறுத்திக்கொண்டே இருக்கிறேன்” என்று முடித்தார் டாக்டர் நாராயண ரெட்டி.