30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்'
தமிழ் சினிமாவில் வெளிவந்த முக்கிய ஆக்ஷன் திரைப்படங்களில் 'சூரியன்' படத்திற்கும் தனி இடம் உண்டு. கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், பவித்ரன் இயக்கத்தில், தேவா இசையமைப்பில், சரத்குமார், ரோஜா மற்றும் பலர் நடித்து 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்த படம் 'சூரியன்'. இன்றுடன் இப்படம் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஐ.பி.எஸ் ஆபீசராக டில்லிப் பணியில் இருந்த சரத்குமார், தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டு டாப் சிலிப் பகுதியில் ஒரு டிரைவராக வேலை செய்கிறார். அப்படி ஒரு தலைமறைவு வாழ்க்கை அவர் வாழ என்ன காரணம் என்பதுதான் படத்தின் கதை. அட, இப்படி ஒரு ஆக்ஷன் படமா என 90களின் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த படம் இது.
சரத்குமார், ரோஜா ஆகியோரது நடிப்பு மட்டுமல்லாது படத்தில் இடம்பெற்ற பல கதாபாத்திரங்களும் ரசிகர்களைக் கவர்ந்தது. குறிப்பாக கவுண்டமணியின் நகைச்சுவை இந்தப் படத்தில் வேற லெவலில் அமைந்தது. 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்று இப்போதும் பல மீம்ஸ்களில் வலம் வந்து கொண்டிருக்கும் அந்த வசனம் இந்தப் படத்தில் கவுண்டமணி பேசிய ஒன்று.
தேவாவின் இசையில் அனைத்துப் பாடல்களுமே ஹிட்டானவை. 'லாலாக்கு டோல் டப்பிமா' என்ற பாடலில் பிரபுதேவாவின் நடனம் மிகவும் பிரபலமான ஒன்று. 'கந்த சஷ்டி கவசம்' பக்திப் பாடலைக் காப்பியடித்து 'பதினெட்டு வயது இளமொட்டு மனது' எனப் பாடலாக்கி சர்ச்சையில் சிக்கினர் தேவா, பாடல் எழுதிய வாலி.
படம் இன்று 30வது வருடத்தைக் கொண்டாடும் நாளில், இப்படம் பற்றி சரத்குமார், ”என்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த 'சூரியன்' படம் வெளியாக இன்றுடன் 30 வருடங்கள் கடந்துவிட்டது என்பதை நினைத்துப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தக் காலத்தில் மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட் படம். இப்படத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போது ஏக்கமாக இருக்கிறது.
எனது நல்ல நண்பன், ஜென்டில்மேன் கேடி குஞ்சுமோன், இயக்குனர் பவித்ரன், இசையமைப்பாளர் தேவா, ஒளிப்பதிவாளர் அசோக்குமார், ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் ஆகியோரை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களை நினைவுபடுத்துகிறது. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மேலும், சூரியன் காலத்தில் என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இன்னும் உயரங்களை எட்டியிருப்பதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, பயணம் தொடர்கிறது,” என அப்படத்தில் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றிய ஷங்கர், வெங்கடேஷ், பாலாஜி படத்தின் நாயகியாக ரோஜா, ஆகியோரையும் குறிப்பிட்டுள்ளார்.