மதுரையில் நேற்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பா.ஜ.க-வினர் காலணி வீசிய சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தின் 76-வது விடுதலைநாள் விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். இறையாண்மைமிக்க ஒன்றிய அரசு – இறையாண்மை மிக்க மாநில அரசுகள் என்கிற அரசியல் சட்டத்தின் வழியே கூட்டாட்சிக் கருத்தியலை முன்னெடுக்கின்ற நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான். ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது. தேசியக்கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார்மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்.
வீரமரணம் எய்திய ராணுவ வீரருக்கு உண்மையாகவே அஞ்சலி செலுத்த நினைத்திருந்தால் அவரது வீடு தேடிச் சென்று, குடும்பத்தினரைச் சந்தித்து, வீரரின் உடல் சுமந்த பெட்டி அங்கே வந்ததும் இறுதி வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும். விடுதலையின் 75-வது ஆண்டினை வெறும் அரசியலுக்காகப் பயன்படுத்தும் இவர்களோ, ஊர் ஊருக்கு விளம்பரம் தேடும் பயணத்தில் ஈடுபட்டு வருவதால், போகிற வழியில் ராணுவ வீரருக்கும் மரியாதை செலுத்துவது போல அரசியல் லாபம் தேடலாம் என்ற கணக்குடன், சட்டவிதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்று, தேசியக்கொடியை அவமதித்துள்ளனர்.
மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் கார்மீது செருப்பு வீசியும், விடுதலையின் 75-ம் ஆண்டு பவளவிழாவில் தேசியக்கொடியை அவமதித்தும் கலவரம்செய்ய முயன்றவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அந்தப் பொறுப்பினை உணர்ந்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் கழகமும் செயல்பட்டு வருகிறது. இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என்கிற உறுதிமொழியையும் உத்தரவாதத்தையும் வழங்குகிறேன்.
இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.