புதுடெல்லி: நாடு முழுவதும் இந்தாண்டு நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத் மூலம் 2.2 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நேற்று மட்டும் 81 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நாட்டின் 75வது சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை தலைநகர் டெல்லியில் நடைபெற்றதால், நேற்று அங்கு தவிர நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. ஏற்கனவே இந்த ஆண்டு இரண்டு லோக் அதாலத்கள் நடத்தப்பட்ட நடத்தப்பட்ட நிலையில் நேற்று மூன்று லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் மூன்று லோக் அதாலத்திலும் 2.2 கோடி வழக்குகளுக்குத் தீர்வு கண்டுள்ளது. ேநற்று மட்டும் 81 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.5,500 கோடிக்கு மேல் தீர்வு காணப்பட்டது. நாடு முழுவதும் 4.2 கோடி வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் உள்ள நிலையில், இந்த ஆண்டு 2.2 கோடி வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டதால், நீதிமன்றங்களின் சுமைகள் குறைந்துள்ளன. இந்த லோக் அதாலத்கள் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மூலம் நடத்தப்படுவதால், இந்தாண்டு நடத்தப்பட்ட 3 தேசிய லோக் அதாலத்தும் உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நடந்தன. இதுகுறித்து தேசிய லோக் அதாலத் அதிகாரிகள் கூறுகையில், ‘லோக் அதாலத் மூலம் போக்குவரத்து சேவைகள், தகவல் தொடர்பு சேவைகள், மின்சாரம் அல்லது நீர் வழங்கும் சேவை, பொதுப் பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு, மருந்தகத்தின் சேவை, காப்பீட்டு சேவைகள், கல்வி நிறுவனங்கள், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவை உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. மூன்றாவதாக நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தானது, டிஜிட்டல் லோக் அதாலத் முறையில் நடத்தப்பட்டது. இதன் மூலம் நீதி வழங்கள் முறையில் வரலாற்று திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்குத் தொடுப்பவர்களுக்கு சரியான நேரத்தில் வழக்கை தீர்த்து வைக்க இத்திட்டம் உதவியது. வழக்குத் தொடுப்பவர்களுக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க முடிந்தது’ என்றனர்.