”ஆகாஷ்வானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சுவாமி”… இந்த கனீர் குரலின் சொந்தக்காரர் தான் சரோஜ் நாராயண்சுவாமி (86). ரேடியோ வாயிலாக இவரது செய்தி வாசிப்பை கேட்டவர்கள் பலபேர் இவரை ஆண் என்றுதான் நினைத்திருந்தனர். அந்த அளவுக்கு இவருக்கு கனீர் குரல்.
சரோஜ் நாராயண்சுவாமி புது தில்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் செய்திச் சேவைப் பிரிவின் தமிழ்ச் செய்திப் பிரிவில் செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். மேலும், முதலமைச்சர்கள் மாநாட்டின் போது முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ஆரின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்.
மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பட்டம் பெற்ற சரோஜ் நாராயண்சுவாமி, புது தில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் பிராட்காஸ்ட் ஜர்னலிசமும் முடித்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வாழ்ந்து வந்த சரோஜ் நாராயண்சுவாமி வயதுமூப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று காலமானார். இறக்கும்போது அவருக்கு 86 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு பொதுமக்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் பேர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ”அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்!
மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என இவ்வாறு பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.