தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், தனக்கு பதிலாக வேறொரு நபரை தேர்வு எழுத வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கடாரம் கொண்டானில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வில் இளைஞர் ஒருவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தேர்வு கண்காணிப்பாளர் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவரது உண்மையான பெயர் திவாகர் மாதவன் என்பதும், பா.ஜ.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுத வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் நாகரத்தினம் திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய திவாகர் மாதவனிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்றும், அவர்தான் தன்னை, பா.ஜ.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கருக்கு பதிலாக தேர்வு எழுத ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார், அதையடுத்து, திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் கைதுசெய்யப்பட்டார். திவாகர் மாதவனிடம் இருந்து திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரின் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் அவருடைய புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையையும் கைப்பற்றினர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். பாஸ்கர்மீது வழக்கு பதிவுசெய்து அவரை கைதுசெய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.