புதுடில்லி:நாட்டின் பிரிவினைக்கு, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே காரணம் என்று கூறும், ‘வீடியோ’ ஒன்றை பா.ஜ., வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்றபோது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது. அந்தப் பிரிவினையின் போது, மக்கள் புலம்பெயர்ந்த போது நடந்த வன்முறைகள் உள்ளிட்டவற்றில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.’பிரிவினையின் கொடூர நினைவு தினமாக, ஆக., 14ம் தேதி அனுசரிக்கப்படும்’ என, பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு அறிவித்தார். அதன்படி கொடூர நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.
எல்லைகள் நிர்ணயிப்பு
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரிவினையின்போது உயிரிழந்தோருக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன். அப்போது நடந்த கொடூரத்தை மனஉறுதியுடன் எதிர்கொண்டோரை பாராட்டுகிறேன்’ என, மோடி குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, இது தொடர்பாக, பா.ஜ., சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் இருக்கும் காட்சிகள் உள்ளன.
அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டை பிரிக்க முடிவு செய்தபோது, சிரில் ஜான் ரெட்கிலிப் சில வாரங்களிலேயே எல்லைகளைநிர்ணயித்துள்ளார்.இந்திய கலாசாரம், பாரம்பரியம், வரலாறு, மக்களின் பழக்கவழக்கங்கள் தெரியாத அவர், பஞ்சாப் மற்றும் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியவர்கள் அப்போது எங்கேசென்றனர்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொடூர சம்பவம்
வீடியோ முழுதும் பிரிவினைக்கு நேருவே காரணம் என்று குற்றஞ்சாட்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:வரலாற்றின் கொடூரமான சம்பவங்களை, தற்போதைய அரசியலுக்கான தீவனமாக பயன்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்கிறார். இவரை போன்ற நவீன சாவர்க்கர்கள், ஜின்னாக்கள், நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.
உண்மையில், நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பதை முதலில் கூறியது சாவர்க்கர். அதையே ஜின்னா பயன்படுத்தினார். அந்த நேரத்தில் பிரிவினையை நாம் ஏற்காமல் இருந்திருந்தால், நாடு பல துண்டுகளாக பிரிந்திருக்கும். இதை, சர்தார் வல்லபபாய் படேலும் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement