சென்னை: சட்ட அனுபவத்தின் இமயம் நடராஜன் மறைவு நீதித்துறைக்கு மட்டுமல்ல, கழகத்திற்கும் மிகப் பெரிய இழப்பு என்று அவரது படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.08.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை: ”நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற மரியாதைக்குரிய சட்ட அறிஞர், மூத்த வழக்கறிஞர் என். நடராஜனுடைய நினைவுகளைப் போற்றக் கூடிய நிகழ்ச்சியாக இந்த படத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நடராஜன் மறைந்தபோது, உடனடியாக அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடைய உடலுக்கு மரியாதை செய்து, நான் அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். அப்போது என்னுடைய இரங்கல் உரையில், நான் குறிப்பிட்டுச் சொன்னேன், ”மூத்த வழக்கறிஞரும், தலைவர் கலைஞருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவருமான நடராஜன் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சிக்கும் மிகுந்த துயரத்திற்கும் நான் உள்ளானேன். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் வல்லுநராக விளங்கிய நடராஜன், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞரின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர் அவர்.
நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகளுக்கு பின்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக ஒரு கமிஷன் அமைக்க வேண்டுமென்று பல ஆண்டு காலம் ஒரு கோரிக்கை இருந்து வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று நம்முடைய தலைவர் கலைஞர் 1969-ஆம் ஆண்டு சட்டநாதன் தலைமையில், ஒரு ஆணையத்தை அமைத்து அந்த ஆணையம் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு அறிக்கையினை அரசுக்கு அளித்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தான், 25 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதமாக மாற்றப்பட்டது. பின்பு 50 சதவீதமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இப்படி வரலாற்று சிறப்புமிக்க அறிக்கையினை நமக்கு அளித்த சட்டநாதன் அவர்களின் மருமகன்தான் நம்முடைய மூத்த வழக்கறிஞர் நடராஜன் ஆவார். இப்படி ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர்.
கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை தனது வாதத் திறமையால் சட்ட உலகில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்து நீங்காப் புகழ்பெற்றவராக விளங்கிக் கொண்டு இருக்கிறார். நீதித்துறைக்கு மட்டுமின்றி, திமுகவுக்கும் அனுபவமிக்க சட்ட நுணுக்கங்கள் தெரிந்த பல வழக்கறிஞர்களை உருவாக்கித் தந்த பெருமைக்குரியவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
நீதியரசர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கினார். இங்கே எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள், மும்பை குண்டு வெடிப்பு. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு வாதாடிய அவர், வழக்கறிஞர் தொழிலுக்கான நேர்மை, அறிவுக்கூர்மை, நம்பிக்கை என அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர்.
சட்ட நிபுணத்துவம் நிறைந்த சட்ட அனுபவத்தின் இமயமாக விளங்கிய நடராஜனின் மறைவு நீதித்துறைக்கும் மட்டுமல்ல, கழகத்திற்கும் மிகப் பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது. அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கக்கூடிய அவருடைய குடும்பத்தினருக்கும், நீதித்துறையைச் சார்ந்திருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” – என்று அப்போது நான் குறிப்பிட்டேன்.
அவருடைய இழப்பு என்பது வழக்கறிஞர்களுக்கு நீதித் துறைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. எங்களைப் போன்றவர்களுக்கும் ஏற்பட்ட இழப்புதான் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நம்முடைய மரியாதைக்குரிய அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரமாக இருந்தாலும் சரி, இங்கே அமர்ந்திருக்கக்கூடிய மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவாக இருந்தாலும் சரி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நடராஜன் சீனியர்தான்.
ஜெயின் கமிஷன் மூலமாக அந்த சோதனை வந்த நேரத்தில், தன்னுடைய வாதங்களின் மூலமாகக் காத்தவர் நம்முடைய நடராஜன் என்பதை யாரும் மறந்திடமுடியாது. நாங்கள் நிச்சயமாக எங்களுடைய வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது.
அதைப்போல, 1996-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதற்கு முன்பிருந்த அதிமுக ஆட்சி காலத்து ஊழல்கள் தொடர்பாக, தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட வேண்டும் என்று முடிவெடுத்தபோது, சீரிய ஆலோசனைகளைச் சொன்னவரும் நடராஜன் தான். இங்கே இருக்கிற சண்முகசுந்தரம், இளங்கோவுககுத் தெரியும். முதல்வர் கலைஞர் நடராஜனை அழைத்து பேசும்போது ‘எந்த வழக்கில் வலுவான ஆதாரம் இருக்கிறதோ அந்த வழக்கை மட்டும் போட்டால் போதும்’ என்று சொன்னார். அதேபோல சட்டபூர்வமான, வலுவான ஊழல் ஆதாரங்கள் உள்ள புகார்களை மட்டும் அன்றைக்கு நாம் போட்டோம். அதுதான் காலம் கடந்தாலும் இறுதியில் வென்றது.’
இவை அனைத்தும் நடராஜனின் சட்ட நுணுக்கத்துக்கு இன்றைக்கும் உதாரணமாக எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கால் நூற்றாண்டு காலம் கொடிகட்டிப் பறந்த வழக்கறிஞர் நடராஜன். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகச் சென்றார். அப்போது, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி ஒன்றை குறிப்பிட்டார். ‘தி கிரிமினல் லெஜெண்ட் ஃப்ரம் தமிழ்நாடு’ என்று இவரைச் சொல்லி இருக்கிறார் என்றால் அந்தளவுக்கு இந்தியாவினுடைய புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர் நடராசன்.
மும்பை வெடிகுண்டு வழக்கில் சிபிஐ தரப்பு வழக்கறிஞராக என்.நடராஜன் நியமிக்கப்பட்டபோது பலரும் ஆச்சரியப்பட்டனர். சிபிஐக்கு எதிரான வழக்குகள் பலவற்றில் ஆஜரான ஒரு வழக்கறிஞரை சிபிஐ தனது தரப்பு வழக்கறிஞராக எப்படி நியமித்தது என்று எல்லோரும் கேட்டனர். மிகப்பெரிய வெடிகுண்டு வழக்கில் ஆஜராவதற்கு சரியான வழக்கறிஞர் இந்தியாவிலேயே நடராஜன்தான் என்று சிபிஐ.யை ஒப்புக்கொள்ள வைக்கும் அளவுக்கு வாதத்திறமையை எடுத்து வைத்து அவர் வெற்றி கண்டார்.
இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த வழக்கில் துளிகூட அச்சமில்லாமல் அவர் ஆஜரானார். அதேபோல் ராஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனையை சிபிஐ நீதிமன்றம் வழங்கியது. உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யப்பட்டபோது, இதில் 19 பேரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கும் அளவுக்கு வாதங்களை வைத்தவர் நம்முடைய நடராஜன்.
இப்படி பல்வேறு வழக்குகளுக்காக பல்வேறு மாநிலங்களின் நீதிமன்றங்களில் வாதாடியவர் நடராஜன். ராம்ஜெத்மலானி சொன்னதைப் போல தி கிரிமினல் லெஜெண்ட் ஃப்ரம் தமிழ்நாடு என்பதாக மட்டுமில்லாமல் ‘ஃப்ரம் இந்தியா’ என்று சொல்லத்தக்க வகையில் வழக்கறிஞர்களுக்கு எல்லாம் பெரிய வழக்கறிஞராக இருந்தவர் நடராஜன்.” இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.