க ர்நாடகாவில், சுதந்திரத்துக்காக முதல் முறையாக பெரிய அளவில் போராட்டம் நடந்தது பாகல்கோட்டில். மக்களுடன் சேர்ந்து வேடுவர்களும் நடத்திய போராட்டம் முக்கிய பங்கு வகித்தது.பொது மக்கள், தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என, 1857ல் ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது. இதை ஹலகலி வேடுவர்கள், கடுமையாக எதிர்த்தனர். வேட்டையாட இவர்களுக்கு ஆயுதங்கள் அவசியம். அது மட்டுமின்றி அவர்கள் சுதந்திர போராட்டத்திலும், அதிக ஈடுபாட்டுடன் இருந்தனர். ராமப்பா, ஹனுமவ்வா, லகுமவ்வா, ஜடகப்பா, பாலப்பா, ராமவ்வா போராட்டத்தின் முன்னணியில் இருந்தனர்.
இவர்களுக்கு நிம்பால்கர் என்ற, மராத்திய படை வீரர் வழி காண்பித்ததுடன், போராட்டத்திலும் பங்கேற்றார். அவர்களின் ஆரம்ப கட்ட போராட்டத்தால் கிலியடைந்த ஆங்கிலேயர்கள், பாகல்கோட்டின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் கிருஷ்ண நாயக், கிருஷ்ண ராவ், ராமராய புஜங்கா, வேடுவர் தலைவர் வீர ஹனும நாயகாவை, சமாதானம் பேச அனுப்பினர். ஆனால் ஹலகலி வேடர்கள், வருவது வரட்டும்; போராட்டத்தை நிறுத்தமாட்டோம், ஆயுதங்களையும் ஒப்படைக்கமாட்டோம் என்றனர்.வேடர்களை பணிய வைக்கும் நோக்கில், செசனகர் கலாதகியிலிருந்து, படை திரட்டி வந்து ஹலகலி மீது தாக்குதல் நடத்தினர்; தோல்வியடைந்தனர். அதன்பின் லெவட்டா, கார் வில்லியம் ஹென்ரி, ஹேவ்லாக் ஆகியோரும் தாக்குதல் நடத்தி, மண்ணை கவ்வினர். தட்சிண மராட்டா பிரிவின் கமாண்டர் மால்கர், பெரிய படையுடன் 1857ன், நவம்பர் 29ல் தாக்கினார். அப்போது ஹலகல குருஷேத்ரமானது. ஆங்கிலேய படையினருக்கு பின்னடைவு ஏற்பட்டது.ஆனால், ஹலகலி போராளிகள் சேகரித்து வைத்திருந்த வெடி குண்டுகளை, சில கறுப்பு ஆடுகள் செயலிழக்க செய்ததால், நாளடைவில் இவர்களின் போராட்டம் வலுவிழக்க ஆரம்பித்தது. அதன்பின் ஆங்கிலேயர்கள் வெறியாட்டம் ஆடினர். கண்ணில் பட்டவர்களை வெட்டி போட்டனர். வீடுகளில் சூறையாடினர். ஊருக்கு தீ வைத்தனர். குழந்தைகளின் தலையை வெட்டினர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.ஜடகப்பா, பாலப்பாவின் போராட்டத்தை, சதியால் முறியடித்த மால்கம், 290 போராளிகளை கைது செய்து, கலாதகிக்கு அழைத்து வருகின்றார். இதில் 19 பேருக்கு துாக்கு விதிக்கப்பட்டது. போராட்ட சூத்திரதாரிகள் ஜடகப்பா, பாலப்பா உட்பட, 13 பேர் 1857ன் டிசம்பர் 11ல், முதோளாவின் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையிலேயே, துாக்கிலிடப்பட்டனர். மற்றவர்கள் மூன்று நாட்களுக்கு பின், ஹலகலியில் துாக்கிலிடப்பட்டனர். முதோளா பஸ் நிலையம் அருகில், ஹலகலி போராட்டத்தை நினைவு கூரும் நோக்கில், ஜடகன்னா, பாலண்ணா பெயரில், நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
– நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement