தேசபக்தி என்ற முத்திரையை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் வரைந்துள்ளார். அதில், இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ணக் கொடியையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஒன்றியமும் அதில் இணைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் மேலும் வலிமை பெற உறுதியேற்பது தான் விடுதலைப் பவள விழாவான 75ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் நோக்கமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இராணுவ வீரருக்கு மரபார்ந்த அஞ்சலி செலுத்தும் இடத்தில், மலிவான விளம்பரத்திற்காக வந்து, அமைச்சர் @ptrmadurai-இடம் வரம்பு மீறிய வீணர்கள் யாரும் தப்ப முடியாது!#IndiaAt75-இல் தியாகிகளைப் போற்றுவோம்!
மூட அரசியலைச் சட்டப்படி அடக்குவோம்!https://t.co/FyoWZkruAT#LetterToBrethren pic.twitter.com/pS2zKYfGTf
— M.K.Stalin (@mkstalin) August 14, 2022
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைப்பவர்கள், தாங்கள் தான் தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு வரம்பு மீறுவது வாடிக்கையாகி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.வீரமரணம் எய்திய ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துமிடத்தில் விளம்பரம் தேட தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவரும் அவரது கட்சி நிர்வாகிகளும் அடாவடியான செயல்களில் ஈடுபட்டதாக சாடி உள்ளார்.
தேசியக்கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது காலணியை வீசி விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஊர் ஊருக்கு விளம்பரம் தேடும் பயணத்தில் ஈடுபட்டு வருவதால், போகிற போக்கில் லாபம் தேடலாம் என்ற கணக்குடன் சட்டவிதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு, தேசியக் கொடியை அவமதித்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM