சென்னை: டெல்லியில் வரும் ஆக.17-ம் தேதியன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் இருந்து வரும் ஆக.16-ம் தேதி இரவு டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அடுத்தநாள் ஆக.17-ம் தேதியன்று, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவையும், 14-வது துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கரையும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்கவுள்ளார்.
அதன்பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, அண்மையில் நடைபெற்று முடிந்த 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்ததற்கும், இந்த போட்டிகளின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்காகவும் பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.
முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமரை அழைக்க டெல்லி செல்லவிருந்த நிலையில் தமிழக முதல்வர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். எனவே அவரால் பிரதமரை விழாவுக்கு நேரில் சென்று அழைக்கமுடியவில்லை. இந்நிலையில், நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் டெல்லி செல்ல இருப்பதாகவும், இந்த சந்திப்பின்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவையும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.