மும்பை: மகாராஷ்டிராவில் அரசு அலுவலகங்களுக்கு வரும் போன் அழைப்பை எடுக்கும் அதிகாரிகள் ஹலோ என்பதற்கு பதில் வந்தேமாதரம் என கூற வேண்டும் என மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்காந்திவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்காந்திவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த அவர் கூறியதாவது: இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தில் நுழையும் நிலையில் சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் மாநில அரசு அலுவலகங்களுக்கு வரும் போன் அழைப்பை ஏற்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஹலோ என்ற வார்த்தைக்கு பதில் வந்தே மாதரம் என கூறவேண்டும். இது தொடர்பான முறையான அறிவிப்பு வரும் 18ம் தேதி வெளியாகும். எனவே அரசு அதிகாரிகள் போன் அழைப்பை பெறும்போது வந்தே மாதரம் என்ற வார்த்தையை அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.