புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாக நேருவை விமர்சித்து பாஜ வெளியிட்ட வீடியோவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து தனி நாடாக பாகிஸ்தான் கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பிரிந்து சென்றது. அந்த நாளை தனது சுதந்திர தினமாக பாகிஸ்தான் கொண்டாடுகிறது. அதேவேளையில், இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வலிகளை நினைவுக்கூரும் விதமாக, இந்தியாவில் இந்த நாள்‘பிரிவினை கொடுமைகள்’நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என கடந்தாண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி நேற்று வௌியிட்டுள்ள பதிவில், ‘இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது, உயிரிழந்த மக்கள் அனைவருக்கும் இன்று அஞ்சலி செலுத்துகிறேன். நமது வரலாற்றின் சோகம் நிறைந்த காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட போதும், அதில் இருந்து மீண்டு மகிழ்ச்சியுடனும், வெற்றியுடனும் மற்றும் மனவுறுதியுடனும் உள்ள அனைவரையும் பாராட்டுகிறேன்,’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், நாட்டின் 2வது பிரிவினை பயங்கரங்கள் நினைவு நாளான நேற்று, காங்கிரசை தாக்கும் வகையில் 7 நிமிடங்கள் ஓடும் வீடியோவை பாஜ வெளியிட்டு உள்ளது. அதில்,‘பாகிஸ்தான் உருவாவதற்காக முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக்கின் கோரிக்கைகளுக்கு முன்னாள் பிரதமர் நேரு தலைவணங்கி விட்டார்,’என குற்றம்சாட்டும் வகையில், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த நாளை குறிப்பிடும் பிரதமர் மோடியின் உண்மையான நோக்கமானது, தற்போது நடந்து வரும் அரசியல் போரில், துயர் நிறைந்த வரலாற்று சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதாகும். நவீன சாவர்க்கர்கள், ஜின்னாக்கள் தொடர்ந்து நாட்டை பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்,’என்று குற்றம்சாட்டி உள்ளார்.