சென்னை: தமிழ்த் திரையுலகின் தன்னிரகற்ற கலைஞர்களில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியமானவர்.
வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது தனது இரண்டாவது அத்தியாத்தைத் தொடங்கியுள்ளார்.
மக்களின் மகா கலைஞன்
‘வடிவேலு’ என்ற பெயரைக் கேட்டாலோ அல்லது உச்சரித்தாலோ கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு மக்களைச் சென்றடைந்தவர் வைகைப்புயல். தன்னைத்தானே கலாய்த்துக்கொண்டு காமெடியால் ரசிகர்களை சுளுக்கெடுக்கும் வல்லமை வடிவேலுவுக்கு ரொம்பவே அதிகம். அதுவே அவரது நடிப்பின் ஆகப்பெரும் தனிச்சிறப்பு. நடிகர் என்பதையும் தாண்டி மக்களின் கலைஞனாக ஜொலித்து வருகிறார் வடிவேலு.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காமெடியனாக வலம்வரத் தொடங்கிய வடிவேலுவின் ஒவ்வொரு அசைவுகளும், ரசிகர்களை கொண்டாட வைத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, யாராக இருப்பினும் தங்களை அறியாமலேயே வடிவேலுவை நகலெடுத்தனர். நக்கலான பேச்சாகட்டும் அல்லது நய்யாண்டித்தனமான லுக் என எதையெடுத்தாலும் அங்கே வடிவேலு இருப்பார், இனிமேலும் இது பல தலைமுறைகளுக்குத் தொடரும்.
ஓரங்கட்டப்பட்ட வடிவேலு
திரைப்படங்களில் படு பிஸியாக இருந்த வடிவேலுக்கு, அரசியல் ரீதியாக அவர் பேசிய சில பேச்சுகள் வினையாகிப் போனதாக சொல்லப்படுகிறது. அவ்வளவு தான் மொத்தமாக சினிமாத்துறையில் இருந்தே ஓரங்கட்டப்பட்டார். சினிமா நிகழ்ச்சிகளில் கூட அவரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், மீம் கிரியேட்டர்கள் அவரை விடுவதாக இல்லை. இதனால், தொடர்ந்து மீம்ஸ்களில் வந்து கிச்சுகிச்சு மூட்டினார் வடிவேலு.
இரண்டாவது அத்தியாயம்
சில வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, இப்போ இரண்டாவது இன்னிங்ஸில் பிசியாகிவிட்டார். ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘மாமன்னன்’, ‘சந்திரமுகி 2′ என அடுத்தடுத்து படங்களில் நடித்துவரும் வடிவேலுவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “வைகைப்புயல் அவர்களே இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் சுருக்கமாக சொல்லவும்” என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் வடிவேலு, “நான் வைகைப்புயல் பேசுகிறேன். வைகை இவ்வளவு நாட்களாக வறண்டு கொண்டிருந்தது. இப்போது வைகை திறந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறார்கள் நன்றி” என பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.