சேலத்தில் கைதான புலிகள் ஆதரவாளர்கள்; என்.ஐ.ஏ., அதிரடி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வரவுள்ள நிலையில், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் இருவர் சமீபத்தில் சேலத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

நம் அண்டை நாடான இலங்கையில் தனி நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பு, 2009ல் இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து புலிகள் அமைப்பு நீர்த்துப் போனது. ஆனாலும், அந்த அமைப்பை மீண்டும் ஒருங்கிணைத்து உயிர் கொடுக்க சிலர் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

தேசிய புலனாய்வு

இந்நிலையில், தமிழகத்தின் சேலம் மாவட்டம், ஓமலுாரில் நவீன், 25, சஞ்சய் பிரகாஷ், 24, என்ற இரண்டு இளைஞர்களை, தமிழக போலீசார் கடந்த மே 19ல் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள், வெடி பொருட்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 29ல் கோவை வரவுள்ள நிலையில், இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக போலீசார் என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு உதவி வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் இதுவரை விடுதலைப்புலிகள் தொடர்புடைய நான்கு வழக்குகளை என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. சேலத்தில் கைதான இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பால் ஈர்க்கப்பட்டு அதை போலவே மற்றொரு அமைப்பை உருவாக்கி போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வழக்கு பதிவு

மேலும், பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர் ஹாஜி சலீமிடம் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தி வரும், குணசேகரன் மற்றும் புஷ்பராஜா ஆகியோர் குறித்தும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இவர்களுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகப்படும் நபர்களுக்கு தமிழகத்தில் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., கடந்த மாதம் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.மேலும், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்பவரை சென்னை விமான நிலையத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்., 1ல் கைது செய்தனர். இவர் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர்கள், நீண்ட நாட்களாக செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்க முயன்றதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாகவும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

– புதுடில்லி நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.