மும்பை: ‘கணவனிடம் இருந்து பிரிந்த பிறகு வேறொரு ஆணுடன் உறவில் இருந்தாலும், கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற மனைவிக்கு உரிமை உண்டு,’ என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த கணவன், மனைவிக்கு 2007ம் ஆண்டு ஜனவரியில் திருமணம் நடந்தது. 2020ம் ஆண்டு குடும்ப வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் கணவர், அவரின் குடும்பத்தினர் மீது மனைவி வழக்கு தொடுத்தார். மேலும், அவர் கணவரிடம் இருந்து பிரிந்து சென்று தனியாக வாடகை வீட்டில் தங்கியுள்ளார். அவருடைய வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சமாக மாதம் ₹75,000, வாடகை பணமாக மாதம் ₹35,000 வழங்கும்படி கணவருக்கு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்தில் கணவன் மேல்முறையீடு செய்தார். அப்போது, தனது மனைவிக்கும் தனது நண்பருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதால், ஜீவனாம்சம் செலுத்தத் தேவையில்லை என்று கணவன் வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதி, வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதால் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்து நீதிபதி பிரகாஷ் நாயக் அளித்துள்ள தீர்ப்பில், ‘வேறொரு ஆணுடன் மனைவி தொடர்பில் இருந்தாலும் அவருக்கு ஜீவனாம்சம் பெறும் உரிமை உள்ளது. மேலும், மனைவிக்கு மாதம் ₹75,000 ஜீவனாம்சமும், வாடகையாக மாதம் ₹38,000மும் கணவன் வழங்க வேண்டும். கணவன் வசதியானவர். அவர் ஆடம்பரமாக வாழ்கிறார். அதே போல் வாழும் உரிமை மனைவிக்கும் உண்டு,’ என தெரிவித்தார்.