புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். கடந்த 13ம் தேதி அவருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டதால், வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு 3 நாட்களுக்கு முன்பாக பிரியங்கா காந்திக்கும் கொரோனா உறுதியானது. இவர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், ராகுல் காந்தியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், கட்சி அலுவலகத்தில் இன்று யார் தேசியக்கொடியை ஏற்றுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அநேகமாக, மூத்த தலைவர் ப.சிதம்பரம் கொடியேற்றுவார் என தெரிகிறது.