புதுடெல்லி: இந்திய வரலாற்றில் மனிதாபிமான மற்ற அத்தியாயத்தை ஒருபோதும் மறக்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேதனை தெரிவித்தார்.
1947-ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைந்தபோது பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக தனியாக பிரிந்தது. முன்னதாக பாகிஸ்தான் தனி நாடு கோரி ஏற்பட்ட பெரும் கலவரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து சென்றதுடன் லட்சக்கணக்கானோர் தங்களது இன்னுயிரையும் இழந்தனர்.
மக்களின் போராட்டம் மற்றும் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ம் தேதி பிரிவினை பேரச்ச நினைவுதினம் அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். இதன்படி, பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் கூறியதாவது.
பிரிவினையின்போது நாட்டுமக்கள் அனுபவித்த வலி மற்றும்சித்தரவதையை இளம் தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில் பிரிவினை பேரச்சநினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குடிமக்கள் என்றென்றும் பராமரிக்கவும் அது உதவும்.
1947-ல் நாட்டில் ஏற்பட்ட பிரிவினை இந்திய வரலாற்றில் மனிதாபிமானமற்ற அத்தியாயமாக, என்றும் மறக்க முடியாததாக இருக்கும். வன்முறை மற்றும் வெறுப்புணர்வு மனோநிலை லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியதுடன் எண்ணிடலங்கா தோரை இடம்பெயரச் செய்து ஆதரவற்றவர்களாக ஆக்கியது.
பிரிவினையின் கொடூர தினமான இன்று, பிரிவினையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களை காணிக்கையாக்குகிறேன். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.