இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனம் போர் சின்னத்திலிருந்து காவல்துறையின் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டது. பின்னர் கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலாளர் இறையன்பு பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
பின்னர் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், கோட்டை கொத்தளத்திற்கு வருகை புரிந்து தேசியக்கொடியை ஏற்றினார்.
இதன்மூலம் 2ஆவது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி சிறப்பித்துள்ளார். தேசியக்கொடி ஏற்றிய போது மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. அத்துடன் பேண்ட் வாத்தியங்கள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
காந்தி மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இந்த நாட்டை காந்தி தேசம் என அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் தந்தை பெரியார். அந்த சம்பவத்தை இப்போது நினைவு கூர்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த ஏராளமான தலைவர்களை ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் முதல்வர் மு.க .ஸ்டாலின், தகை சால் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது ,துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா விருது, முதலமைச்சர் நல்லாளுமை விருது போன்ற விருதுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.