கெய்ரோ: எகிப்தின் கிசா பகுதி தேவாலயத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 55 பேர் படுகாயம் அடைந்தனர்.
எகிப்து மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். சுமார் 10 சதவீதம் அளவுக்கு கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். எகிப்தின் கிசா பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர். அங்குள்ள தேவாலயத்தில் நேற்று ஆராதனை நடைபெற்றது. இதில் 5,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆராதனை நடைபெற்று கொண்டிருந்தபோது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மளமளவென்று பரவியது. கூட்டநெரிசல் காரணமாக தேவாலயத்தில் இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதன்காரணமாக 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர். 55-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைஅணைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எகிப்து அதிபர் அல் சிசி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.