ஆக்ஸ்போர்டு: இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய நாடுகளின் ஈஸா ஆகியவை விண்வெளியிலிருந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளன.
பூமியிலிருந்து 408 கி.மீ உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில், 45 வயதான சமந்தா கிரிஸ்டோபோரட்டி என்ற விண்வெளி வீராங்கனை தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த சமந்தா, ஐரோப்பிய யூனியனின் விண்வெளி மையத்தில் (ஈஸா) பணிபுரிந்து வருகிறார்.
இதுகுறித்து சமந்தா மேலும் கூறியிருப்பதாவது: இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் சர்வதேச விண்வெளி நிலையம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. சர்வதேச விண்வெளி முகமை பல ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவுடன் பல்வேறு விண்வெளி, அறிவியல் திட்டங்களில் வெற்றிகரமாக இணைந்து செயலாற்றி உள்ளது.
அந்த பங்களிப்பு இஸ்ரோவின் எதிர்கால திட்டமான நிஸான் எர்த் சயின்ஸ் வரை தொடர்ந்து வருகிறது. இந்த திட்டம் பேரழிவு நிகழ்வுகள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை முன்கூட்டியே தெளிவாக அறிந்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப ககன்யான் திட்டத்தின் மூலம் தீவிரமாக தயாராகி வரும் இஸ்ரோவுக்கு நாசா, ஈஸா மற்றும் சர்வதேச விண்வெளி பங்குதாரர்கள் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இஸ்ரோவுடனான எங்களின் கூட்டணியை விரிவுபடுத்துவதும், இந்த பிரபஞ்சத்தை ஒன்றாக இணைந்து ஆராய்வதும் எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கான இலக்காகும். இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தெரிவிக்கப்பட்ட வாழ்த்துகளுக்கு இஸ்ரோ ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.