'நம் தேசம் வளரவேண்டுமானால் பெண்களை மதிக்க வேண்டும்' – பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் பெண்களை மதிக்க வேண்டும். நமது பெண் சக்திக்கு நாம் துணையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். தேசிய கீதம் ஒலிக்கப்பட மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் துவக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி அவர்களின் கனவின்படி இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க மக்கள் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்று பட்டியலிட்டார். பின்னர் தேச வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுப் பேசினார்.

பிரதமர் மோடி உரையிலிருந்து: இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் நமது பெண் சக்திக்கு நாம் துணையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதுதான் இந்திய வளர்ச்சிக்கான தூண். நம் பேச்சிலும், செயலிலும் பெண்களின் மாண்பைக் குறைக்கும் சிறு வெளிப்பாடு கூட இருக்கக் கூடாது. நம் தேசத்தின் மகள்கள், தாய்மார்கள் நாட்டுக்காக பெரும் பங்களிப்பை நல்கி வருகின்றனர். சட்டம், கல்வி, அறிவியல், காவல்துறை என நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பெண் சக்தியின் பங்களிப்பு அளப்பரியது.

பெண் வெறுப்பை துடைத்தெறிவோம். பெண்கள் முன்னேற்றத்தை உறுதி செய்தால் தேச முன்னேற்ற இலக்கை சீக்கிரமாக அடையலாம்.

75 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிலேயே உருவான துப்பாக்கியிலிருந்து இந்திய தோட்டா முழங்கியதைக் கேட்டபோது பெருமையாக இருந்தது. இதற்காக இந்திய ராணுவத்திற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டின் குழந்தைகள் இறக்குமதி பொம்மைகளை தவிர்க்கும்போது நான் அவர்களுக்கு மரியாதையை உரித்தாக்குகிறேன். 5 வயது குழந்தை ஒன்று வெளிநாட்டு பொம்மை வேண்டாம் என்று கூறினால் அதன் நாடி நரம்புகளில் தேசப்பற்று பாய்கிறது என்று அர்த்தம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

9வது முறையாக கொடியேற்றிய பிரதமர் மோடி: முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். அதன் பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.