`சைக்கிளில் சுமந்த ராக்கெட் டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்' – இந்திய விண்வெளி சாதனைகள்

1. இந்தியாவின் முதல் ராக்கெட் ஒரு சைக்கிள் கேரியரில் வைத்து எடுத்துச் சென்று விண்ணில் ஏவப்பட்டது. திருவனந்தபுரம் அருகே தும்பா பகுதியில் ஒரு தேவாலயம்தான் ராக்கெட் ஏவுதளமாக செயல்பட்டது. மாட்டு வண்டியில் பொருட்களை அங்கு எடுத்துச் சென்றார்கள். இன்று விண்வெளியை வசப்படுத்திய டாப் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

2. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இது 1975-ம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஏனெனில், அப்போது நம்மிடம் அதற்கான தொழில்நுட்பம் இல்லை. ஆனால், இப்போது வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இங்கு கொண்டுவந்து விண்ணுக்கு அனுப்பும் அளவுக்கு முன்னேற்றம் பெற்றிருக்கிறோம்.

3. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ராகேஷ் சர்மா. 1984-ம் ஆண்டு ரஷ்ய ராக்கெட்டில் ஏறி விண்ணுக்குப் பறந்த சர்மா, அங்கிருந்தபடி பிரதமர் இந்திரா ௐகாந்தியிடம் பேசினார். ‘விண்வெளியிலிருந்து பார்க்க இந்தியா எப்படித் தெரிகிறது?’ என்று இந்திரா கேட்க, ‘சாரே ஜஹான் சே அச்சா…’ என்ற பாடலைச் சொல்லிப் பரவசப்பட்டார் ராகேஷ் சர்மா.

4. முதன்முறையாக 1999-ம் ஆண்டு தென் கொரியா மற்றும் ஜெர்மன் செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் ஏவியது. இந்திய செயற்கைக்கோள்களைத் தாண்டி வணிகரீதியாக இஸ்ரோ செய்த முதல் முயற்சி அது. இன்று வணிகமுறையில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அதிகம் அனுப்பும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதனால் அந்நியச் செலாவணியும் கணிசமாகக் கிடைக்கிறது.

5. விண்ணுக்குச் செலுத்தப்பட்ட ஒரு கேப்ஸ்யூலை திரும்பவும் பாதுகாப்பாக பூமியின் வளிமண்டலத்துக்குள் கொண்டுவந்து, அதை பாராசூட் துணையுடன் கடலில் விழச்செய்து பத்திரமாக மீட்கும் சோதனையை 2007-ம் ஆண்டு இந்தியா செய்தது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் முதல் கட்டம் இது. இந்த சோதனையில் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

6. நிலவுக்கு சந்திரயான் 1 விண்கலத்தை 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக ஏவியது இந்தியா. இதன்மூலம் நிலவை வசப்படுத்திய ஐந்து நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது. நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் கண்டறிந்தது

7. செவ்வாய் கிரகத்தை எட்ட மங்கள்யான் விண்கலத்தை 2013-ம் ஆண்டு இந்தியா ஏவியது. 2014 செப்டம்பரில் இது செவ்வாயை அடைந்தது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு அடுத்து செவ்வாயை எட்டிய நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா. இதில் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தது இந்தியா மட்டுமே!

8. ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் சென்று நிலைநிறுத்தியது இந்தியா. 2017-ம் ஆண்டு செய்யப்பட்ட உலக சாதனை இது. இவ்வளவு செயற்கைக்கோள்களையும் சில நிமிடங்களிலேயே ராக்கெட்டிலிருந்து பிரித்து அனுப்பி, ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் சிக்கலான நடைமுறையை வெகு துல்லியமாக செய்து சாதித்தனர் நம் விஞ்ஞானிகள்.

9. மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு எடுத்துச் சென்று சாதனை புரிந்தது இந்தியா. 2018-ம் ஆண்டு இஸ்ரோ ராக்கெட் எடுத்துச் சென்ற ஜிசாட்-29 செயற்கைக்கோளின் எடை 3,423 கிலோ. கிட்டத்தட்ட ஒரு யானையின் எடை. இவ்வளவு பிரமாண்ட செயற்கைக்கோளையும் நம்மால் விண்ணில் ஏவ முடியும் என்று இந்தியா நிரூபித்தது.

10. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ அமைப்பு கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. இதற்கான பரிசோதனைகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. விரைவில் ஓர் இந்தியர், இந்திய மண்ணிலிருந்து, இந்திய விண்கலத்தில் பயணம் செய்து விண்வெளியில் பறந்து திரும்புவார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.