விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தேசியகொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.பின்னர் காவல்துறையின் அணிவகுப்பை திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டு பின் அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் மூவர்ண பலூன்களையும்,அமைதிக்கான வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டார்.பின்னர் சுதந்திரக்காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகளை கெளரவிக்கும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.
மத்திய மாநில அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை, சுகாதாரத்துறை,காவல்த்துறை,வேளாண்துறை உள்ளிட்ட 45 துறைகளை சேர்ந்த 179 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் அய்யம்மாள் என்பவருக்கு ரூ 1 லட்சம் வீடுகட்ட மானியமும்,சுபேதார் முத்துராமலிங்கம் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகை மானியமாகவும் ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் 2021 ஆம் ஆண்டிற்கான சிறுசேமிப்பு திட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் 9 பள்ளிகளை சேர்ந்த 98 மாணவ,மாணவியர்களின் தேசப்பற்று மிக்க பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.