அன்று ரூ.1 கோடி; இன்று ரூ.10.05 லட்சம்… பணத்தை மீண்டும் திருப்பிக்கொடுத்த நல்லகண்ணு

நாட்டின் 76-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
76-ஆவது சுதந்திரதின அமுதப்பெருவிழாவில் கலந்துகொள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் புடைசூழ அழைத்து வந்தனர். அணிவகுப்பு ஏற்கும் மேடை அருகே வந்த முதலமைச்சரை தலைமைச் செயலாளர் இறையன்பு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது காவல்துறை உயர் அதிகாரிகளும் முதலமைச்சரை வரவேற்றனர். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தமிழக மக்களுக்கு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இந்த தகைசால் தமிழர் விருதுடன் 10 லட்ச ரூபாய்-க்கான காசோலை அவரிடம் வழங்கப்பட்டது. இந்த தொகையை பெற்றுக்கொண்ட ஆர். நல்லகண்ணு அந்த தொகையுடன், தன்னுடைய நிதியான 5 ஆயிரத்தையும் சேர்த்து 10 லட்சத்து ஐந்தாயிரத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார் pic.twitter.com/eyinfoFyHL
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 15, 2022

ஒருபோதும் பணம், பொருள், பதவி மீது ஆசை கொள்ளாதவர் என்று பெயரெடுத்த மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, ஏற்கெனவே தனது 80-வது பிறந்தநாளின்போது கட்சி திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாயை, மீண்டும் கட்சிக்கே அளித்துவிட்டார். அப்போது அவருக்கு கார் வழங்க, கட்சி நிர்வாகிகள் முடிவு எடுத்திருப்பதை அறிந்து பதறிப்போய் தனக்கு கார் எல்லாம் வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் அப்போது வெளியாகின.
இதேபோல், தமிழக அரசு அம்பேத்கர் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தபோதும், பாதி தொகையை கட்சிக்கும், மீதி தொகையை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் அளித்தவர். இந்த நூற்றாண்டின் மிக அதிசயமான அரசியல்வாதியாக அறியப்படுகிறார்.
மேலும், சுதந்திர தின விழாவில் ஏ.பி.ஜே அப்துல்கலாம் விருது முனைவர் இஞ்ஞாசிமுத்துவுக்கும், கீழ்வேளூர் எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.