கோபம் வரும் ரோபோ: அசத்தும் 13 வயது சிறுவன்!

சென்னை கே.ஆர்.எம். பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவன் பிரதிக். இவருக்கு சிறு வயதில் இருந்தே விண்வெளி ஆராய்ச்சி, ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவைகளில் ஆர்வம் இருந்துள்ளது. இந்த நிலையில், ரஃபி எனும் பெயர் கொண்ட கோபம் வரக் கூடிய ரோபோவை அவர் தயாரித்துள்ளார்.

இந்த ரஃபி தி ரோபோவை எதிர்காலத்தில் ஹுமனோய்டாக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறும் அவர், இந்த ரோபோவுக்கு கோபம் என்ற ஒரு உணர்ச்சி மட்டும் உள்ளது. எதிர்காலத்தில் சோகம், மகிழ்ச்சி போன்ற பல உணர்ச்சிகளையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார். இந்த ரோபா எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய செயல்முறை விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கணிணி, ராக்கெட்டரி, விண்வெளி டெக்னாலஜி, எதிக்கல் ஹேக்கிங் ஆகியவற்றில் எனக்கு ஆர்வம். நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது, புத்தகங்களை பெற்றோர் வாங்கித் தருவர். அதில் விஞ்ஞானிகள் பற்றி பார்ப்பேன். அவர்கள் செய்யும் வேலைகளை பார்ப்பேன். இதன் மூலம் அந்ததுறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பிறகு படிப்படியாக அடிப்படை முதல் கற்றுக் கொண்டேன். ஆழமாகவும் கற்றுக் கொண்டேன். தொடர்ந்து, ராக்கெட் அறிவியல் தாண்டி மற்றவை மீதும் ஆர்வம் ஏற்பட்டது. விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அல்லது நாசாவில் பணிக்கு செல்ல ஆசை.” என்றார்.

அடிப்படையில் இருந்து ரோபோ செய்ய ஆரம்பித்தாக கூறும் பிரதிக், “ஆரம்பிக்கும் போது, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வீட்டில் எனக்கு ஒத்துழைப்பு அதிகம். எனக்கு தோல்விகள் வரும்போது, அவர்கள் ஊக்குவிக்கத்தான் செய்வார்கள். எனது பள்ளியிலும் முழு ஒத்துழைப்பு தருவார்கள்.” என்றார்.

பிரதிக் பற்றி அவரது தாயார் கூறுகையில், “சிறு வயதில் இருந்தே ஏதாவது நோண்டிக் கொண்டே இருப்பான். என்ன செய்கிறான் என்பதே தெரியாது. ப்ரோகிராமிங் எல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனால், ஒரு வடிவமாக பார்க்கும் போது, சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு ஒத்துழைப்பு அளிக்கத் தொடங்கினோம். இஸ்ரோ நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளான். தனியாக எதற்கும் அவன் படிக்கவில்லை. அனைத்தையும் இணையம், யுடியூப் உள்ளிட்டவைகளை பார்த்தே கற்றுக் கொண்டான்.” என்றார் பெருமிதமாக.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.