தமிழக போலீஸ் தேர்வு: காலியிடம் குறைவு; கட் ஆப் அதிகரிக்கும்; உஷார் மக்களே!

TNUSRB Police exam Cut off Syllabus and Preparation tips: தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் பணியிடங்களுக்கான கட் ஆஃப் இந்த ஆண்டு அதிகரிக்கும் என தெரிகிறது. அது ஏன்? என்பதையும், இந்த தேர்வுக்கான தேர்வு முறை, சிலபஸ் உள்ளிட்ட தகவல்களையும் இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4: இந்த காரணத்தால் கட் ஆஃப் குறையும்… ரிசல்ட் தேதி எப்போது?

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40% அல்லது 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது.

இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

உடற்தகுதி தேர்வு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 24 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

NCC அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 6 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், வேலை வழங்கப்படும்.

தமிழ் மொழி தகுதித் தேர்வு

இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு

இலக்கியம் – திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவை

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் – தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு

முதன்மை எழுத்துத் தேர்வு

இரண்டாம் பகுதியாக முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் பெறக் கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அடுத்த செயல்முறைக்கு தகுதி செய்யப்படுவார்கள். இது 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இதில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும்.

பொது அறிவு – இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.

உளவியல் – தொடர்பு அல்லது தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

கணிதம் – சுருக்குக, மீ.பெ.வ & மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம் & நட்டம், நேரம் & வேலை, சங்கிலி தொடர், குழாய் & தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு ஆகியவை கணிதப் பகுதியில் கேட்கப்படும் முக்கிய தலைப்புகளாகும்.

தேர்வுக்கு தயாராவது எப்படி?

இவற்றில், தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக புக் பேக் கொஸ்டின் மற்றும் அடைப்புக்குள் உள்ள தகவல்களையும் நன்றாக படித்துக் கொள்ள வேண்டும்.

இந்த முறை 70 கேள்விகள் கேட்கப்பட உள்ள நிலையில், அவை எளிமையாக கேட்கப்படலாம். ஏனெனில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வினாக்கள் எளிமையாக இருந்தன. இருப்பினும், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பில்லை. ஏனெனில் காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் போட்டி கடுமையானதாக இருக்கும். உடற்தகுதி தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவும், அதிகமானோர் தேர்வுக்கு போட்டியிடலாம்.

இந்த 70 கேள்விகளில் 27 கேள்விகள் வரலாறு, குடிமையியல், அரசியலமைப்பு, புவியியல் அடங்கிய சமூக அறிவியல் பாடத்தில் இருந்தும், 20 கேள்விகள் உளவியல் பாடத்திலிருந்தும், 10 கேள்விகள் அறிவியல் பாடத்திலிருந்தும், 8 கேள்விகள் நடப்பு நிகழ்வுகளில் இருந்தும், 5 கேள்விகள் தமிழில் இருந்தும் இடம்பெறலாம். அதற்கேற்றாற்போல் தேர்வர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும்.

கட் ஆஃப் எப்படி இருக்கும்?

இந்த போலீஸ் தேர்வுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள், கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு அவர்கள் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். முதலாவது, இந்த ஆண்டு போலீஸ் தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை குறைவு. இது போட்டியை அதிகப்படுத்தியுள்ளது.

அடுத்ததாக, இந்த ஆண்டு முதன்மை தேர்வுக்கான மதிப்பெண்கள் 80லிருந்து 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உடற்தகுதி தேர்வுக்கான மதிப்பெண்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், போலீஸ் தேர்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கானோர் தயார் ஆகி வருகின்றனர். மேலும், குரூப் 4 தேர்வுக்கு தயாரானவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆனவர்கள் தற்போது போலீஸ் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, போலீஸ் வேலை வேண்டும் என நினைப்பவர்கள் இதற்காக தீவிர பயிற்சி எடுத்தால் மட்டுமே இந்த ஆண்டு காக்கிச்சட்டை போட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.